சிறையில் இறந்த கோபிதாசின் இறுதிக்கிரியையில் ஆர்ப்பாட்டம்

ததேகூ அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் பங்கேற்றன.
Image caption ததேகூ அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் பங்கேற்றன.

கொழும்பு மகசீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற கோபிதாசின் மரணத்திற்கு நீதியான சாவதேச விசாரணையொன்றைக் கோரி பருத்தித்துறையில் ஞாயிறன்று அவருடைய இறுதிக்கிரியைகள் நடைபெற்றபோது, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்படவேண்டுமென இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் சிறைக் கைதிகளின் கொலைகள் மற்றும் மர்மமான மரணங்கள் கைதிகள் மீதான சித்திரவதை என்பற்றை இந்த ஆர்ப்பாட்டம் கண்டித்திருக்கின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமசமாஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும், காணாமல் போனோரின் நலன்களுக்கான அமைப்புகள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பு போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர்.

கோபிதாஸின் மரணத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்லாதே, தமிழ் அரசியல் கைதிகளைச் சித்திரவதை செய்யாதே, அரசியல் கைதிகள் பயங்கரவாதிகளல்ல, அவர்கள் எம் பிள்ளைகள் போன்ற கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களினால் எழுப்பப்பட்டன.

Image caption பருத்தித்துறையில் இறுதிக்கிரியைகள் நடந்தன.

மாடு அறுக்கக் கூடாது என்று தெற்கில் கண்டன ஊர்வலங்கள் நடத்தப்படும்போது மகசின் சிறைச்சாலையில் உணவும் மருந்துமின்றி தமிழ் அரசியல் கைதிகள் உயிரிழக்கிறார்கள்.

இதனைக் கண்டிப்பதற்கு எவரும் முன்வருவதில்லை. கோபிதாஸின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பாஸ்கரா இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரியுள்ளார்.

"சிறைச்சாலையில் அடித்துக் கொல்லப்பட்ட நிமலரூபன் போன்றோரின் மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை அதிகாரபூர்வமாக அவர்களுடைய குடும்பத்தினருக்கு அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை. அவர்களுக்கான மரணச் சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை. இதன் மூலம் தமிழர்கள் மீது இனரீதியான ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது." என இங்கு உரையாற்றிய காணாமல்போனோரைத் தேடிக் கண்டறியும் அமைப்பைச் சேர்ந்த சுந்தரம் மகேந்திரன் கூறியுள்ளார்.

"உள்ளக விசாரணையொன்றின் மூலம் இத்தகைய மரணங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து நீதி கிடைக்கப்போவதில்லை. கடந்த 2012 ஆம் ஆண்டு ஜெனிவா தீர்மானத்தின்போது, சர்வதேச விசாரணையை நாங்கள் உறுதிப்படுத்தியிருந்தால், கோபிதாஸ் போன்ற கைதிகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கமாட்டாது." என இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

"தமிழ் அரசியல் கைதிகள், பயங்கரவாதிகளல்ல. அவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவே தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள். எனவே, அவர்கள் அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய் வேண்டும். அதற்காகக் கட்சி பேதங்களைக் கடந்து அனைவரும் போராட வேண்டும்." என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.