திருமுறிகண்டியில் குண்டுவெடிப்பு; நால்வர் காயம்

இலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் மாங்குளத்திற்கு வடக்கே அமைந்துள்ள திருமுறிகண்டி பகுதியில் வீட்டு முற்றத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை பிற்பகல் மூன்றரை மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பழைய இரும்பு சேகரிக்கும் இடத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்த இரும்புப் பொருள் ஒன்றை இரும்பு சேகரிக்கும் ஒருவர் அடித்தபோது அது பெரிய சத்தத்துடன் வெடித்ததாகச் சொல்லப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் உற்பத்தி செய்யப்பட்ட பழைய குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பத்தில் அழகர் இராமச்சந்திரன், அவருடைய மனைவி அல்லிநாயகி, அவருடைய சகோதரன் அழகர் இராமநாதன், இராஜேந்திரன் மேனகா ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசாரும், திருமுறிகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவத்தினரும் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.