மன்மோகன் சிங்கை சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஷ

மன்மோகன் சிங்கை சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஷ
Image caption மன்மோகன் சிங்கை சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஷ

பர்மாவில் நடக்கின்ற வங்கக் கடல் நாடுகளுக்கிடையே, பல்துறை தொழில் நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை அங்கு சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் இருவருக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் நட்புறவுடன் இருந்ததாகவும், இரு நாடுகளுக்கும் பொதுவான பல விடயங்கள் குறித்து அவர்கள் உரையாடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நே பி தவ் நகரில் உள்ள மியான்மர் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வங்கக் கடல் நாடுகளின் மாநாட்டின்போது நடந்த இந்த பிரத்தியேகச் சந்திப்பில், இலங்கையின் தேசிய திட்டச் செயற்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்கல் ஆகியவை குறித்து இந்தியப் பிரதமருக்கு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எடுத்து விளக்கியதாக ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையிலான ஊடாட்டம் குறித்து மன்மோகன் சிங் அவர்கள் விசாரித்ததற்கு பதிலளித்த இலங்கை ஜனாதிபதி அவர்கள், வட மாகாண சபைக்கான தனது ஒத்துழைப்பை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்திய - இலங்கை மீனவர் விவகாரம் குறித்து இருநாட்டு தலைவர்களும் உரையாடியதாகவும், தினமும் சுமார் 1500 இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் ஊடுருவி மீன்பிடித்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விபரித்ததாகவும் கூறப்படுகின்றது.