ஜப்பானியத் தூதுவர் யாழ் விஜயம்

ஜப்பானியத் தூதுவருடன் வடமாகாண ஆளுனர்
Image caption ஜப்பானியத் தூதுவருடன் வடமாகாண ஆளுனர்

யாழ்ப்பாணத்துக்கு வந்த ஜப்பானிய தூதுவரிடம் அரசியலை விடுத்து, அபிவிருத்தி பற்றியே தாம் பேச்சு நடத்தியதாக வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

''வடமாகாண சபையைப் பொறுத்தமட்டில், அரசியலைவிட, அபிவிருத்தியே இப்போது முக்கியமாக இருக்கின்றது. ஆகவே, அபிவிருத்தி தொடர்பான விடயங்களையே நாங்கள் பேசினோம்'' என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், திங்களன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவருடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிட்டோ ஹோபோ, வடமாகாண ஆளுனர், வடமாகாண முதலமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியிருக்கின்றார். முல்லைத்தீவுக்கும் அவர் விஜயம் செய்தார்.

ஜயிக்கா என்ற ஜப்பானிய நிறுவனத்தின் ஊடாக ஜப்பான் அரசு போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

''வடபகுதி மக்கள் யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாரிய வேலைத்திட்டங்களையும் பார்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம், அவர்களுடைய வாழ்க்கைக் கஸ்டங்களைப் போக்குவதற்கான வேலைத்திட்டங்கள் என்பவற்றை முன்னெடுப்பதே இன்றைய அவசரத் தேவையாக இருக்கின்றது. இது பற்றி அவரிடம் நாங்கள் எடுத்துக் கூறினோம். அவரும் ஜய்க்கா நிறுவனத்தின் ஊடாக முடிந்த உதவிகளைச் செய்வதாகத் தெரிவித்துள்ளார்'' என்றார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.