திருகோணமலை ஐவர் வழக்கில் சந்தேகநபர் மூவருக்கு நீதிமன்றம் பிடி ஆணை

திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு அருகிலேயே மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.
Image caption திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு அருகிலேயே மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.

திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பன்னிரன்டு சந்தேக நபர்களில் மூன்று பேருக்கு எதிராக தற்போது நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது.

2006ம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலை நகரில் காந்தி சிலைக்கு அருகாமையில், பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி கிடைத்திருந்த மாணவர்கள் உட்பட ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவை வரையில் பேசப்பட்டு வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குற்றப்புலனாய்வு துறையினரால் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த 12 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வியாழனன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது 12 சந்தேக நபர்களில் 9 பேர் மட்டுமே ஆஜரான நிலையில், ஆஜராக தவறிய மூவரையும் கைதுசெய்வதற்கான பிடி ஆணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான உத்தரவை பிறப்பித்த மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா, எதிர்வரும் ஏப்ரல் 24ம் திகதி வரை விசாரணைகளை ஒத்திவைத்துள்ளார்.

அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு 32 சாட்சிகளுக்கும் அழைப்பாணை அனுப்புமாறு மற்றுமோர் உத்தரவையும் நீதிமன்ற பதிவாளருக்கு மஜிஸ்திரேட் பிறப்பித்துள்ளார்.