ஜனாதிபதிக்கு ஆதரவாக கல்முனை தமிழ் மக்கள் பேரணி

ஜனாதிபதி ஆதரவு பதாதைகள் காணப்பட்டன
Image caption ஜனாதிபதி ஆதரவு பதாதைகள் காணப்பட்டன

ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ள இவ்வேளையில், கிழக்கு மாகாணத்திலுள்ள கல்முனை நகரில் ஞாயிறன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் மக்கள் கலந்துகொண்ட பேரணியொன்று நடைபெற்றுள்ளது.

கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துதல் உட்பட அந்த பிரதேச தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் கல்முனை தமிழ் சிவில் சமூகத்தினால் இந்த பேரணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ததேகூ கோரிக்கை

ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் இந்த பேரணியில் தமிழ் மக்கள் கலந்துகொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டடிருந்தபோதிலும் பெண்கள் உள்ளடங்கலாக பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டார்கள்.

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்திலிருந்து புறப்பட்ட இந்த பேரணி கல்முனை பிரதான சாலைகள் மற்றும் தரவை பிள்ளையார் ஆலயம் வழியாக கல்முகை வடக்கு பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.

Image caption பெண்கள் பங்கேற்றிருந்தனர்

பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஜனாதிபதியின் உருவப்படம் , தேசிய கொடி மற்றும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாதைகளை ஏந்தியவாறு காணப்பட்டார்களே தவிர, இதில் ஜெனீவா தொடர்பான பதாதைகளோ கோஷங்களோ இல்லை.

பேரணி முடிவில் பிரதேச செயலாளர் கே. லவநாதனிடம் குறிப்பாக பிரதேச செயலகத்ம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜனாதிபதிக்கான மகஜரை ஏற்பாட்டாளர்கள் கையளித்தனர்.

ஜனாதிபதிக்கான இந்த ஆதரவு பேரணியை ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவான பேரணியாக கருது முடீயுமா? என செய்தியாளர்கள் ஏற்பாட்டாளர்களிடம் வினா எழுப்பிய போது அவர்களிடமிருந்து முமுமையான பதிலை பெற முடியவில்லை.

கல்முனை தமிழ் சிவில் சமூகத்தின் தலைவரான பொன். செல்வநாயகம், ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்துவதற்கான பேரணி இது என்று மட்டும் சுருக்கமாக பதில் அளித்தார்.