மஹிந்த ஆதரவு பேரணியில் கிழக்கு முஸ்லிம்கள்

கூட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.
Image caption கூட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.

ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக வைக்கப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் வெள்ளிக்கிழமையன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் கலந்துகொண்ட பேரணியொன்று நடைபெற்றது.

கல்முனை பிரதேசத்திலுள்ள சில பள்ளிவாசல்களும் முஸ்லிம் சமூக அமைப்புகளும் இணைந்த ஏற்பாட்டில் கல்முனை நகரில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

கடந்த சில தினங்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் மக்கள் கலந்துகொண்ட வழங்கும் பேரணியொன்று கல்முனை தமிழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்னர் கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக ஒன்று கூடிய முஸ்லிம்கள் அங்கிருந்து பேரணியாக வழியாக கல்முனை தெற்கு பிரதேச செயலகததை சென்றடைந்தனர்.

ஜனாதிபதியின் உருவப்படம் , இலங்கை தேசிய கொடி மற்றும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாதைகள் மற்றும் ஜெனிவா தீர்மானத்திற்கு எதிரான வாசக அட்டைகளையும் தமது கைகளில் ஏந்தியவாறு அவர்கள் காணப்பட்டார்கள்.

பிரதேச செயலாளர் ஐ. எம் ஹனிபாவிடம் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் மனுவொன்றை கையளித்த பின்பு, ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும், ஜெனிவா தீர்மானத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் கலைந்துசென்றனர்.

அதேவேளை மட்டக்களப்பு நகரிள்ள காந்தி சதுக்கத்தில் முன்னாள் மாநகர முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றுள்ளது.

முன்னாள் மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஒரு சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராகவும் வாசக அட்டைகளை ஏந்தியவாறும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.