இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

மஹிந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது
Image caption மஹிந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நாவின் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அரச ஆதரவாளர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால மற்றும் அந்தக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பி.சுமதிபால ஆகியோரும் ஜெனிவா பிரேரணைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

அரச ஆதரவாளர்கள் ஆண்களும் பெண்களுமாக இதில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

"யுத்தம் முடிவிற்கு வந்ததையடுத்து நாட்டில் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்.நாட்டில் அமைதி நிலவுகின்றது. அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த முன்னேற்றத்தையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் அமைதியையும் குலைக்கும் வகையிலேயே, ஐ.நா.மனித உரிமை சபையில் அரசிற்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்படுகின்றது" என இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் குற்றஞ்சுமத்தினார்கள்.

இதனைக் கண்டிக்கும் வகையிலேயே தாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக அவர்கள் கூறினார்கள்.