விடுதலையான மனித உரிமை ஆர்வலர்கள் ஊடகங்களிடம் பேசத் தடை

படத்தின் காப்புரிமை www.lankanewsweb.com
Image caption ஊடகங்களுடன் பேசத் தடை, பாஸ்போர்ட்டுகள் பறிமுதல்

இலங்கையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்ட இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஊடகங்களிடம் பேசுவதிலிருந்து தடை விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அருட்தந்தை பிரவீன் மகேசன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரின் பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர்களது விடுதலை நிபந்தனையற்றது என்று அவர்களிடம் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடுப்புப் போலிசார், நீதிமன்றத்தை அணுகி இந்த ஆர்வலர்கள் ஊடகங்களுடன் பேசுவதற்குத் தடையை வாங்கினார்கள் என்று எமது இலங்கை செய்தியாளர் சார்லஸ் ஹாவிலண்ட் தெரிவிக்கிறார்.

அவர்களது கணினிகளைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

ஐநாவின் மனித உரிமை கவுன்சிலில், கடும் விமர்சனங்களை இலங்கை அரசு எதிர்கொள்ளும் இந்நேரத்தில் இந்த புதிய நடவடிக்கைகள் வருகின்றன.

இதே நேரத்தில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் பணியாற்ற , வேலையறற இளைஞர்கள ஒன்று திரட்டி , தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீண்டும் இயங்க முயல்வதாக இலங்கை அரசு குற்றஞ்சாட்டுகிறது.