இலங்கையில் மனித உரிமை முறைப்பாடுகள் எண்ணிக்கை குறைந்துள்ளது

இலங்கை உச்சநீதிமன்றம் படத்தின் காப்புரிமை gov.lk
Image caption இலங்கை உச்சநீதிமன்றம்

இலங்கையின் உச்சநீதிமன்றத்தில் சென்ற வருடம் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மனுக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

முந்தைய ஆண்டுகளில் மிக அதிகமாக வந்திருந்த மனித உரிமை முறைப்பாடுகளின் எண்ணிக்கை கடந்த வருடம் 430ஆக குறைந்துள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அவசரகாலச் சட்டங்கள் நீக்கப்பட்டிருப்பதால், மனித உரிமை முறைப்பாடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதிபா மஹானாம ஹேவா தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள் போன்றவை குறைந்து வருவதால் இந்த வீழ்ச்சி என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் நீதிமன்ற கட்டமைப்பின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது என ஜனநாயகத்தைக் காக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் துணைத் தலைவர் சந்திரபால குமாரகே தெரிவித்தார்.

மனித உரிமை வழக்குகளில் இலங்கை உச்சநீதிமன்றம் ஆர்வம் காட்டுவதில்லை, பல வழக்குகள் விசாரிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்பதால்தான் மனுக்களை முன்னெடுத்துவருவதில் சட்டத்தரணிகள் தயக்கம் காட்டுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

சென்ற வருடம் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனித உரிமை மனுக்களில் பெரும்பான்மையானவை காவல்துறைக்கும், கல்வித்துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகள் ஆகும்.