'இந்திய - இலங்கை மீனவர் இரண்டாம் கட்டப் பேச்சு மீண்டும் ரத்து'

முதற்சுற்றுப் பேச்சுவார்த்தையில் பிடிக்கப்பட்ட படம்
Image caption முதற்சுற்றுப் பேச்சுவார்த்தையில் பிடிக்கப்பட்ட படம்

இலங்கை இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையில் நாளை நடைபெறவிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவாரத்தைகள் நடைபெற மாட்டாது என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கருத்து வெளியிட்ட இலங்கையின் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் தேசிய மீனவர் சம்மேளனத்தின் பணிப்பாளரும், அமைச்சரின் தமிழ் ஊடக இணைப்பாளருமாகிய தங்கவேல் சதாசிவம் அவர்கள், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 74 இந்திய மீனவர்களையும் பேச்சுவார்த்தைக்கு முன்னர், விடுதலை செய்ய வேண்டும் என்று மீண்டும் இந்தியத் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த நிபந்தனையின் அடிப்படையில் இலங்கை மீனவர் பிரதிநிதிகள் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனை குறித்து, இந்திய அரசாங்கமோ, தமிழ் நாட்டு அரசாங்கமோ நேரடியாக இலங்கைக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்காத போதிலும், நாளை 25 ஆம் திகதி காலை பத்து மணிக்குப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குரிய சகல ஏற்பாடுகளையும் இலங்கை அரசு செய்திருக்கின்ற போதிலும், பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள வருகின்றோம் என்றோ அல்லது பேச்சுவார்த்தைகளுக்கு வரமாட்டோம் என்றோ இது வரையில் இந்திய அரச தரப்பில் எந்தவிதமான அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என்றும் தேசிய மீனவர் சம்மேளனப் பணிப்பாளர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கைக்கு வந்து, பேச்சுக்களில் கலந்து கொள்ளுமாறு இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கு தாங்கள் அழைப்பு விடுத்திருந்ததாகவும், எனினும் ஒரு மாதகாலத்திற்கு இலங்கைக் கடற்பரப்பினுள் வருவதில்லை என்று இரு தரப்பினரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் மீறி, மீன்பிடிப்பதற்கு வந்திருந்த 172 மீனவர்கள் 39 படகுகளுடன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு, இம்மாதம் 13 ஆம் திகதி நடைபெறவிருந்த பேச்சுக்களில் கலந்து கொள்வதற்காக இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற இந்திய கோரிக்கையை ஏற்று நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்திருந்த போதிலும் இந்தியத் தரப்பினர் பேச்சுக்களை பின்போட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனையடுத்து, சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக் கடற்பரப்பினுள் வந்த 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை விடுதலை செய்தால்தான் பேச்சுக்களில் கலந்து கொள்ள முடியும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என்றும், இதனை இலங்கை அமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சதாசிவம் தெரிவித்துள்ளார்.