'புதிய ஆதாரங்கள்': சர்வதேச விசாரணை தேவை என்கிறார் நவி பிள்ளை

படத்தின் காப்புரிமை AP
Image caption 'பாதுகாப்பு உத்தரவாதம் இருந்தால் சாட்சியாளர்கள் வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருக்கிறார்கள்'

இலங்கையில் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றே தேவைப்படுகின்றது என்றும் அவ்வாறான சர்வதேச விசாரணை சாத்தியமானது என்றும் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

புதிதாக வந்துகொண்டிருக்கின்ற ஆதாரங்களும் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் முன்னால் சாட்சியமளிப்பதற்கு சாட்சியாளர்கள் முன்வருகின்றமையும் தமது இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் நவி பிள்ளை ஜெனீவாவில் இன்று புதன்கிழமை நடைபெற்ற இலங்கை மீதான விவாதத்தின்போது தெரிவித்தார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற தீர்மான முன்-வரைவு உறுதியாகிவிட்டதாக நம்பப்படுகின்ற நிலையில், அடுத்த கட்டமாக வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்னதாக, இலங்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

விவாதத்தை தொடங்கி வைத்த ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை, எல்எல்ஆர்சி-யின் பரிந்துரைகளில் சில முன்னேற்றங்களை காட்டியிருப்பதாக இலங்கை கூறுகின்ற போதிலும், முக்கியமான பல விவகாரங்களில் இன்னும் முன்னேற்றம் எட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

இம்முறை ஜெனீவா அமர்வு நடந்துகொண்டிருக்கும்போது கூட இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் வேலைகள் நடந்துவருவதாக நவி பிள்ளை சுட்டிக்காட்டினார்.

'இந்த சந்தர்ப்பத்தில் புதிய ஆதாரங்கள் வெளியாகிவருகின்றன. சாட்சியாளர்களும் தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சர்வதேச பொறிமுறை ஒன்றுக்கு முன்னால் வாக்குமூலம் அளிப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். சர்வதேச விசாரணை ஒன்று தேவைப்படுகிறது என்பதை மட்டுமல்ல, அது சாத்தியமானதும் கூட என்பதையே இவை காட்டுகின்றன' என்றார் நவி பிள்ளை.

'கிளிநொச்சி சம்பவங்கள்'- ஆதாரம் என்கிறது இலங்கை

படத்தின் காப்புரிமை webtv.un.org
Image caption 'விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகிறார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது'

ஆனால், ஒரு நாட்டில் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்காக எடுக்கப்படுகின்ற நடவடிக்ககைள், அந்த நாட்டின் சம்மதத்துடனேயே எடுக்கப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால், நல்லிணக்க நடவடிக்கைளில் நுண்ணிய சமநிலை பாதிக்கப்படும் என்றும் இலங்கைப் பிரதிநிதி ஐநாவில் வாதிட்டார்.

நவி பிள்ளையின் அறிக்கையும் அவரது நிலைப்பாடும் தவறான தகவல்களை ஆதாரங்களாகக் கொண்டிருப்பதாக பேசிய ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, இலங்கையில் வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 'குறிப்பாக கிளிநொச்சியில் நடந்த அண்மைய சம்பவங்களும், பயங்கரவாதிகள் மீண்டும் ஒன்று கூடுவதாக கிடைத்துள்ள ஆதாரங்களும் முன்னாள் போராளி ஒருவர் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவமும் எங்களின் கவலைகளை மேலும் உறுதிப்படுத்துகின்றன' என்றார் ரவிநாத ஆரியசிங்க.

வெளிநாட்டிலிருந்து இயங்கும் விடுதலைப்புலிகளின் விரிவான வலையமைப்பு ஒன்றின் மூலம் இந்த நடவடிக்கைகள் நடந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் நவி பிள்ளையின் சர்வதேச கோரிக்கையை வரவேற்றுப் பேசின.

அண்மைக் காலங்களாக மதச் சிறுபான்மை சமூகங்கள் மீது நடந்துவரும் தாக்குதல்கள் பற்றியும் வடக்கில் இராணுவத்தினர் பொதுமக்களின் சிவில் வாழ்க்கையில் தலையீடு செய்கின்றமை பற்றியும் அமெரிக்கா சுட்டிக்காட்டியது.

இந்தியா தொடர்ந்தும் மௌனம்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption 'இலங்கையில் மதச் சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை'

முன்னாள் யுத்த வலயங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் நடந்துவருகின்றமை தொடர்பில் நவி பிள்ளை எழுப்பிய கவலைகளை தாமும் எதிரொலிப்பதாகவும் கூறிய அமெரிக்கப் பிரதிநிதி கூறினார்.

ஆனால்,பாகிஸ்தான், கியூபா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கை சார்பில் குரல் கொடுத்தன.

'இலங்கை அதன் தேசிய சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கு சீனா ஆதரவளிக்கிறது' என்றார் சீனப் பிரதிநிதி.

இலங்கையின் உள்விவகாரங்களில் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரின் அறிக்கை நேரடியாக தலையிடுவதாகவும், மனித உரிமைகள் விவகாரம் சில நாடுகளால் தங்களின் பூகோள அரசியல் தேவைக்காக பயன்படுத்தப்படுவதாகவும் ரஷ்யா உள்ளிட்ட அணியினர் தெரிவித்தனர்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இம்முறை அமர்வில் இலங்கை விவகாரம் தொடங்கிய நாள் முதலே இந்தியா எந்தவிதமான நிலைப்பாட்டையும் இதுவரை தெளிவாக வெளிப்படுத்தவில்லை. இன்றைய விவாதத்திலும் இந்திய பிரதிநிதி எதுவும் கூறாமல் மெளனம் காத்தார்.

மனித உரிமை ஆர்வலர்களான ருக்கி பெர்ணான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோரின் கைது பற்றியும் பல்வேறு நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் ஜெனீவாவில் விமர்சித்திருந்தன.