குராம் ஷேய்கின் காதலி சந்தேகநபரை அடையாளம் காட்டினார்

Image caption '2012-ம் ஆண்டு அடையாள அணிவகுப்பின்போது அச்சம் காரணமாக சந்தேகநபரை அடையாளம் காட்டவில்லை'

இலங்கையில் கடந்த 2011-ம் ஆண்டு நத்தார் பிறப்பின்போது பிரித்தானிய பிரஜையான குராம் ஷேய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது தன் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர் ஒருவரை, குராம் ஷேய்கின் காதலி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை அடையாளம் காட்டினார்.

2012-ம் ஆண்டு தங்காலை நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின்போது, தனது உயிருக்கு இருந்த அச்சுறுத்தல் காரணமாக குறித்த சந்தேகநபரை அடியாளம் காண்பிக்க தவறியதாகவும் விக்டோரியா அலெக்ஷாண்டிரியா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும் தனக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதாக இலங்கை அரசு உறுதியளித்தபடியால், நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க தான் முன்வந்ததாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, குராம் ஷேய்க் கொலை வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 6 பேரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

படத்தின் காப்புரிமை bbc
Image caption குராம் ஷேய்க்

வழக்கு விசாரணை இன்று தொடங்கியபோது, ரஷ்யாவில் வசிக்கும் விக்டோரியா அலெக்ஷாண்டிரியா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

குராம் ஷேய்க்குடன் இருந்தபோது நடந்த சம்பவங்களை அவர் நீதிமன்றத்தில் விபரித்தார்.

குராம் ஷேய்க் தாக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்ததாகக் கூறிய அலெக்ஷாண்டிரியா, தானும் தாக்கப்பட்டமை பற்றி விபரித்தார்.

பின்னர் தானும் மயக்கமடைய, மாத்தறை மருத்துவமனையில் வைத்தே தனக்கு நினைவு திரும்பியதாக குராம் ஷேய்க்கின் காதலி கூறினார்.

தனக்கு நினைவு திரும்பியபோது, தனது ஆடையின் மேற்பகுதி கிழிக்கப்பட்டிருந்ததாகவும் உள்ளாடை அகற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். அப்போது தான் பெரும் வேதனையுடன் இருந்ததாகவும் அவர் கூறினார்.

அரசதரப்பு சட்டத்தரணி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, தன்னைத் தாக்கிய சந்தேகநபரையும் அடையாளம் காட்டினார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்