'இலங்கையில் சுமூகமான தேர்தல்- 50 வீதத்துக்கும் அதிகமான வாக்களிப்பு'

(இலங்கைத் தேர்தல் ஆவணப்படம்) படத்தின் காப்புரிமை EPA
Image caption (இலங்கைத் தேர்தல் ஆவணப்படம்)

இலங்கையில் மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம் ஆகியவற்றுக்கான தேர்தல் வாக்களிப்புக்கள் சுமூகமாக நடந்ததாக இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தல் மூலம் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாண சபைக்கு 102 உறுப்பினர்களும் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணத்திற்கு 53 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்யப்படவுள்ளனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சி உட்பட 25 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேட்சைக்குழுக்கள் சார்பாக மொத்தம் 3194 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

இன்று பிற்பகல் 4 மணியுடன் வாக்களிப்புக்கள் முடிவுக்கு வந்தன. ஆயினும் 3 மணி வரையிலான கணிப்புக்களின்படி 50 வீதத்துக்கும் அதிகமான வக்களிப்பு நடந்ததாக தேர்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையரான ஆர். எம். எல். ஏ. ரட்ணாநயக்கா தெரிவித்துள்ளார்.

இரவு பத்து மணிவாக்கில் முதலாவது முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தன் வன்செயல்கள் குறித்து மிகவும் குறைவான முறைப்பாடுகளே வந்துள்ளதாகவும், ஆயினும் வாக்களிப்பை குழப்பும் வகையில் தீவிரமான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் மேலதிக தேர்தல் ஆணையர் கூறினார்.

இதற்கிடையே தேர்தல் முறைகேடுகள் குறித்து சில முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ள போதிலும் கடந்த கால தேர்தல்களைவிட இது சுமூகமாகவே இருந்ததாக இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் அஹ்மட் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

இன்றைய வாக்களிப்பு தின சம்பவங்கள் குறித்து 66 முறைப்பாடுகள் தமக்கு வந்ததாகவும் அவற்றில் பேருவளை பகுதியில்நடந்த ஒரு சம்பவமே தீவிரமானதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேருவளை சம்பவத்தில் ஆளும் கட்சியின் ஆதரவாளர்களுடனான மோதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனாஸ் தெரிவித்துள்ளார்.