மாகாணசபை தேர்தல் முடிவுகள்: ஆளும் கூட்டணி ஆட்சி நீடிக்கிறது

இலங்கை ஜனாதிபதி படத்தின் காப்புரிமை Reuters
Image caption இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் நடைபெற்று முடிந்த மேல் மாகாணசபை மற்றும் தென் மாகாணசபைக்கான தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள போதிலும் 2009ம் ஆண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலில் பெற்றிருந்த உறுப்பினர்களை விட இம்முறை குறைவான உறுப்பினர்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது.

இலங்கை மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தனது தற்போதைய ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருந்தாலும் அதன் வாக்குவீதமும், மாகாணசபை இடங்களும் குறைந்திருப்பது என்பது இலங்கை அரசு மீதான அதிருப்தி அதிகரித்து வருவதை குறிப்புணர்த்துவதாக கூறுகிறார் தினக்குரல் செய்தியாசிரியர் கேஆர்பி ஹரன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

2009ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது 12 ஆசனங்களைக் குறைவாகப் பெற்றுள்ளது, ஐக்கிய தேசிய கட்சியும் இரண்டு ஆசனங்களைக் குறைவாகப் பெற்றுள்ளது, ஆனால் ஜேவிபி உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஆறாக உயர்ந்துள்ளது.

தனித்து போட்டியிட்ட அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆனால் மற்றுமோர் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஒருவர் கூட தெரிவாக முடியாதவாறு அக்கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மாவட்டமான காலி, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணசபையிலும் ஆளும் கக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த ஆசனங்களில் சரிவு ஏற்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தலில் 38 ஆசனங்களை பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை 33 ஆசனங்களையே பெற்றுள்ளது.

அதேவேளை ஜேவிபியுடைய ஆசனங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக அதிகரித்துள்ளது.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியுடைய ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் இல்லை என்பதை அம் மாகாணத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

இலங்கை அரசியலில் ஐநா மனித உரிமைகள் பேரவை விவகாரம் முன்னிலைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் இந்த இரண்டு மாகாணசபைகளுக்குமான தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஆளும் கூட்டணியின் செல்வாக்கு தற்போது சரிவைக் கண்டுள்ளதாகவே தேர்தல் முடிவு காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சி இலங்கை அரசியலில் மூன்றாவது சக்தியாக வருவதற்குரிய வாய்ப்புகள் தென்படுவதாகவே முடிவுகள் காட்டுகின்றன.