தமிழ் மக்கள் இராணுவக் கெடுபிடியில்: சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

சுரேஷ் பிரேமச்சந்திரன்
Image caption சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கையின் வட பகுதியில் தமிழ் மக்கள் இராணுவ நெருக்குவாரத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், கடந்த ஒரு மாத காலமாக இங்கு நடைபெற்று வருகின்ற இராணுவ சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள் என்பவற்றை முப்படைகளின் தளபதியாகிய ஜனாதிபதி உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியிருக்கின்றது.

கோபி என்பவரின் தலைமையில் விடுதலைப் புலிகள் மீண்டும் அணி சேர முயற்சிக்கிறார்கள் எனக் கூறி, அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு பத்துலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்து, இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்படுவதாக திங்களன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

"யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதி நேற்று இராணுவத்தினரால் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், வன்னிப் பிரதேச்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக இராணுவத்தினர் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

"அதிகாலையில் தோட்டத்திற்குத் தண்ணீர் இறைக்கச் செல்லும் தோட்டச் செய்கையாளர்களாகிய வயோதிபர்களும் தங்களுடன் தேசிய அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று இராணுவத்தினர் வற்புறுத்தியிருக்கின்றார்கள். இதனால் மீண்டும் ஒரு யுத்த நிலைமை ஏற்பட்டுவிட்டதோ என்று தமிழ் மக்கள் அச்சமடைந்திருக்கின்றார்கள். இந்த நிலைமையை இல்லாமல் செய்ய வேண்டும். அதற்கு உடனடியாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இளம் பெண்களை இராணுவத்தில் சேர வேண்டும் என்று இராணுவத்திவனர் வன்னியில் வற்புறுத்தி வருவதாகவும், யுத்தத்தில் பெற்றோரை இழந்து தனிமையில் அண்ணனுடன் வாழ்ந்து வருகின்ற தங்கை, இராணுவத்தில் சேர மறுத்ததையடுத்து, அண்ணனை இராணுவத்தினர் கைது செய்ததாக தமக்கு முறையிடப்பட்டிருப்பதாகவும், இத்தகைய நடவடிக்கைகளை அனுமதிக்கமுடியாது என்றும், இது பற்றியும் ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

"யுத்தம் முடிவடைந்த பின்பும், விடுதலைப் புலிகள் மீண்டும் அணிசேர முயற்சிக்கிறார்கள் எனக் கூறி, தமிழ் மக்கள் அனைவரையும் நெருக்குத்களுக்கு உள்ளாக்கியிருக்கின்ற நெருக்கடியான சூழலை இல்லாமல் செய்து, அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய சூழலை உருவாக்குவது முக்கியமாகும்."

வட இலங்கையில் தற்போதுள்ள இவ்வாறான நிலைமைகளை எடுத்துக் கூறி பேச்சு நடத்துவதற்காகவே தென்னாபிரிக்காவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பிரதிதிநிதிகள் அடங்கிய குழவொன்று செல்லவுள்ளது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.