"ததேகூவின் தென்னாப்பிரிக்க பயணம், ஐநா விசாரணைகளை பாதிக்காது"

ஆர் சம்பந்தன்
Image caption ஆர் சம்பந்தன்

இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தென்னாபிரிக்கா செல்வது, ஜெனிவா பிரேரணையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள சர்வதேச விசாரணையை எந்த வகையிலும் பாதிக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணைக்கும் இந்த விஜயத்திற்கும் இடையே எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்று அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் சூமா, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இலங்கை அரசுடனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் பேசி தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வந்திருந்தார்.

இதன் விளைவாக அரச தூதுக்குழுவொன்று தென்னாபிரிக்கா சென்று திரும்யியயிருந்தது.

மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மாநாட்டின் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தென்னாப்பிரிக்கா சென்று பேச்சு நடத்துவதாக முன்கூட்டியே முடிவாகியிருந்தது.

அப்பேச்சுக்களுக்கான அழைப்பை தென்னாபிரிக்கா விடுத்திருந்த பின்னணியிலேயே, புதன்கிழமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தென்னாப்ரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், பிபிசியிடம் கூறினார்.

இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான அடிப்படை காரணங்கள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பில் சகல விதமான விடயங்கள் பற்றி இந்த விஜயத்தின்போது பேச்சு நடத்தப்படும் என்று சம்பந்தன் தெரிவித்தார்.

ஐநா மன்றத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று அரசாங்கம் கூறியிருப்பது நல்ல முடிவல்ல என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் குறிப்பிட்டார்.