'ஹம்பாந்தோட்டை மேயரின் ஆட்களே தாக்கினர்': ஐதேக

Image caption அரசாங்கக் கட்சி ஆதரவாளர்களே தம்மைத் தாக்கியதாக ஐதேக எம்.பிக்கள் கூறுகின்றனர்

தென்னிலங்கையில் மத்தல சர்வதேச விமானநிலையத்தையும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் பார்வையிடச் சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீது வன்முறை கும்பல் ஒன்று நேற்று வியாழக்கிழமை தாக்குதல்களை நடத்தியதாக காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்மைத் தாக்கிய கும்பலுக்கு ஹம்பாந்தோட்டை மாநகரசபை மேயரே தலைமை தாங்கிவந்ததாகவும், அவர் கைத்துப்பாக்கியுடன் தம்மைத் துரத்தியபோதிலும் அவரைக் கைதுசெய்ய காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறை தலைமையகத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அரசு பெரும் செலவில் நிர்மானித்துள்ள விமானநிலையம் மற்றும் துறைமுகத்தின் பலன்கள் குறித்தும் செயல்திறன் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், ஆளுங்கட்சியினரின் கோரிக்கையின் பேரிலேயே தாம் அவற்றை நேரில் பார்க்கச் சென்றதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எனினும் மத்தல விமானநிலையத்தை பார்வையிட்டுவிட்டு வெளியில் வரும்போது கும்பலொன்று தம்மை மறித்து குழப்பங்களை விளைவித்ததாகவும் கூக்குரலிட்டு ஏளனம் செய்ததாகவும் கூறிய யோகராஜன், அதே குழுவினரே ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலும் தம்மீது தக்காளிகள், முட்டைகள், கற்களை வீசித் தாக்குதல்களை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

Image caption ஹம்பாந்தோட்டை மாநகர மேயர் எராஜ் ரவிந்திர பெர்ணான்டோ

ஹம்பாந்தோட்டை மாநகரசபை மேயர் எராஜ் ரவீந்திர பெர்ணான்டோவே அந்தக் கும்பலுக்குத் தலைமை ஏற்றிருந்ததாகவும் கையில் கைத்துப்பாக்கியுடன் தமது வாகனத்தை துரத்திக்கொண்டு வந்ததாகவும் ஐக்கிய தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

'வெறும் விளையாட்டுத் துப்பாக்கியே'

ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஹம்பாந்தோட்டை மாநகரசபை மேயர் பிபிசியிடம் நிராகரித்துப் பேசினார்.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை காப்பாற்றுவதற்காகவே தான் 3 பேருடன் துறைமுகப் பகுதிக்குச் சென்றதாகவும் தானே அவர்களை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்ததாகவும் கூறினார் எராஜ் பெர்ணான்டோ.

தனது கையில் இருந்தது 'வெறும் விளையாட்டுத் துப்பாக்கி' என்றும் ஐதேக எம்பி-க்களை எதிர்த்தவர்களை அச்சுறுத்துவதற்காகவே தான் அதனைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

காவல்துறையினரும் தானும் சேர்ந்தே ஐதேக எம்பிக்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாகவும் எராஜ் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மேயர் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் படங்கள் ஊடகங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.