பிக்குகள் எதிர்ப்பு: இந்து ஆலய புனரமைப்புப் பணிகள் நிறுத்தம்

திருகோணமலை மாவட்டத்தில் இந்து ஆலயமொன்றின் புனரமைப்புக்கு அரசாங்க அதிபரால் அனுமதியளிக்கப்பட்டுள்ள போதிலும் கடும் போக்குடைய பௌத்த பிக்குகளினால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Image caption ஆலயப் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டலும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேசத்திலுள்ள கங்குவேலி அகத்தியர் வழிபாட்டு தலத்தின் புனரமைப்பு பணிகளுக்கு பௌத்த பிக்குகள் உட்பட சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தடை காரணமாக ஆலய புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு உடமைகளுக்கு காவல் துறையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அகத்தியர் வழிபாட்டு மையம் எனப்படும் இந்த ஆலயத்தில் அகத்திய முனிவர் சிவலிங்கம் வைத்து வழிபாடு செய்ததாக இந்துக்கள் நம்புகின்றனர்.

போர் மற்றும் இன வன்முறைகளையடுத்து கடந்த காலங்களில் இந்த ஆலயம் கைவிடப்பட்டு வழிபாடுகளும் தடைப்பட்டிருந்தன.

போருக்கு பின்னர் ஆலய நிர்வாகம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கத் தயாரான போது அண்மித்த பகுதியிலுள்ள பௌத்த பிக்குகள் உட்பட சிலரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பணிகள் தடைபட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

அரசாங்கம் அனுமதி

Image caption அரச அனுமதியுடன் பணிகள் தொடங்கின

சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ஆர். டி. சில்வா நேரில் சென்று அந்த இடத்தை பார்வையிட்டு புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்க ஆலய நிர்வாகத்தினருக்கு அனுமதி வழங்கியிருந்தார்.

அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரிரு நாட்களால் அந்த பகுதியிலுள்ள பௌத்த பிக்குகள் உட்பட சிலரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பணிகளை தாம் நிறுத்திக் கொண்டதாக ஆலய பரிபாலன சபை தலைவரான வேலுப்பிள்ளை தவராசா கூறுகின்றார்.

ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் பௌத்த மத வழிபாட்டு தடயங்களை கொண்ட தொல்பொருள் ஆய்வுக்கு உட்பட்ட இடமென பௌத்த பிக்குகளினால் கூறப்படுவதையும் அவர் நிராகரித்துள்ளார்.

காணி அபகரிப்புடன் தொடர்புடைய நபர்களே ஆலய புனரமைப்புக்கும் தடைகளை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பாக அரசாங்க அதிமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வின் போது இதை விவாதிப்பதற்கான முன்னறிவித்தலை எதிர்கட்சித் தலைவர் சி தண்டாயுதபாணி விடுத்துள்ளார்.