'மன்னார் மற்றும் யாழ் ஆயர்கள் தேசத்துரோகிகள்' - பொதுபலசேனா

பொதுபலசேனா செயலர்
Image caption பொதுபலசேனா செயலர்

இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறை மாவட்டங்களின் ஆயர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த குற்றத்துக்காக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு மற்றும் யாழ்ப்பாண ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பினர் இலங்கை போலீஸாரிடம் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளனர்.

இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆயர்கள் இருவரும் சர்வதேச சமூகத்திடம் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலம் இலங்கையை அவர்கள் காட்டிக்கொடுப்பதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலபொட அத்தே ஞானசார தேரர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

இலங்கை இராணுவம் பல்லாயிரக்கணக்கான மக்களை இனப்படுகொலை செய்ததாகக் கூறி, அவர்கள் இருவரும் தேசத்துரோகக் குற்றத்தை செய்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பொதுபலசேனாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து இரு ஆயர்களின் கருத்தை எம்மால் உடனடியாகப் பெறமுடியவில்லை.