ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிறுநீரக வியாபாரம்: தனியார் மருத்துவமனை மறுப்பு

Image caption சிறுநீரகம் விற்றவர்கள் இந்தியப் பணத்தில் எட்டரை லட்சம் ரூபா வரையிலும் ஏஜண்டுகள் ஒன்றரை லட்சம் ரூபா வரையிலும் வாங்கியுள்ளனர்

இந்தியாவிலிருந்து வந்து சிறுநீரகங்களை பணத்திற்கு விற்ற நபர்களுக்கும் அவர்களின் ஏஜண்டுகளுக்கும் இலங்கையிலுள்ள சில மருத்துவமனைகளில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கையின் பிரபல தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான நவலோக்க மறுத்துள்ளது.

சிறுநீரகத்தை பணத்திற்கு விற்பதற்காக கொழும்புக்கு ஆட்களை அனுப்பிவைத்தக் குற்றச்சாட்டில் இந்தியாவில் ஹைதராபாத் நகரில் மூன்றுபேரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

இந்த 'கிட்னி ஏஜண்டுகளுக்கு' இந்தியப் பணத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபா வரை செலுத்தப்பட்டிருக்கிறது.

சிறுநீரகத்தை விற்றவர்களுக்கு, ஊடகங்களுக்கு வந்த தகவலின்படி, ஒருவருக்கு எட்டரை லட்சம் ரூபா வரை கொடுக்கப்பட்டிருக்கிறது.

சிறுநீரகங்களை விற்றவர்களுக்கும் அந்த வியாபாரத்தை ஏற்பாடு செய்த தரகர்களுக்கும் மருத்துவர்களே நேரடியாக பணம் கொடுத்துள்ள சம்பவங்கள் நடந்துள்ளதாக கொழும்பிலுள்ள சில மருத்துவமனைகளின் பெயர்களையும் ஹைதரபாத் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இலங்கையில் பிரபலம் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான நவலோக்க மருத்துவமனையின் இயக்குநர் லால் சமரசிங்க, சிறுநீரகங்கள் விற்கப்பட்டமைக்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று கூறினார்.

அப்படி பணத்திற்கு சிறுநீரகம் விற்பது சட்டவிரோதம் என்றும் அவர் ஏற்றுக்கொண்டார்.

முறைப்பாடுகள் இல்லை: இலங்கை காவல்துறை

படத்தின் காப்புரிமை sri lanka police
Image caption எந்த மருத்துவமனையிலும் சிறுநீரக வியாபாரம் நடந்துள்ளதாக தகவல் இல்லை: இலங்கை காவல்துறை

இந்தியர்களைக் கொண்டு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளை தமது மருத்துவர்கள் நடத்தியுள்ளார்கள் என்ற போதிலும், இரண்டு அரசாங்கங்களினதும் சட்டத்தரணிகளினதும் அனுமதியுடன் தான் அவை நடந்துள்ளன என்றும் லால் சமரசிங்க கூறினார்.

அதுவும் ஒரு இந்தியரிடமிருந்து பெறப்படும் சிறுநீரகம் இன்னொரு இந்தியருக்கே பொருத்தப்படுவதாகவும், சிறுநீரக கொடையாளிகளை தம்முடனேயே அழைத்துவந்தவர்களுக்கே அதுவும் சாத்தியம் என்றும் நவலோக்க மருத்துவமனை இயக்குநர் பிபிசியிடம் கூறினார்.

இதற்கிடையே, இலங்கை மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளில் கடைபிடிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நாட்டின் சுகாதார அமைச்சு மருத்துவர் ஒருவரை நியமித்துள்ளது.

இந்தியாவில் கைதான மூன்று ஏஜண்டுகளும் 21 பேரை சிறுநீரகத்தை விற்பதற்கு அனுப்பியிருப்பதாக கூறும் இந்தியக் காவல்துறையினர், இலங்கைக்கு விசாரணைக்காக குழுவொன்றை அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி பிபிசி தமிழோசை வினவியபோது, இந்தியாவிடமிருந்து அதிகாரபூர்வமான கோரிக்கை வந்தால் இந்திய காவல்துறையின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண கூறினார்.

'இலங்கைப் பொலிசாரும் இதுபற்றி தகவல்களைத் திரட்டி வருகின்றனர். இன்னும் எங்களுக்கு வெற்றிகரமான தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. இலங்கையில் தனியார் மருத்துவமனைகள் பல இருக்கின்றன. எங்குமே சிறுநீரகங்கள் பணத்திற்காக விற்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை' என்றார் அஜித் ரோஹண.