தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய குழு அமைப்பு

Image caption கட்சியாகப் பதிவு செய்ய நடவடிக்கை

இலங்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தேர்தல் திணைக்களத்தில் ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கடந்த எட்டு மாதங்களில் முதற் தடவையாக செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் கூடியபோதே இந்தக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஐந்து கட்சிகள் கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக, தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரப்பட்டிருந்தது.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அது தொடர்பான நடவடிக்கைகளை இந்தக் குழு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமாகிய சித்தார்த்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அதேவேளை, இந்த ஒருங்கிணைப்பு குழு நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் கூடும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீரமானிக்கப்பட்டிருக்கின்றது.

வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளை ஆராய்ந்து சிபாரிசுகளை முன்வைப்பதற்கும் குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை முக்கியமான நேரங்களில் கூட்டுமாறு பல தடவைகள் கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும், அது இப்போதுதான் நிறைவேறியிருக்கின்றது. அத்துடன் இந்த கூட்டத்தில் முன்னேற்றகரமான முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது திருப்தியளிப்பதாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்