கிழக்கு பல்கலை. வந்தாறுமூலை வளாகம் மீண்டும் மூடப்பட்டது

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகம் ஒரு மாதத்தின் பின்னர் திறக்கப்பட்டப் போதிலும் தொடர்ந்தும் விரிவுரைகளை நடத்த முடியாத நிலையில் மீண்டும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21-ம் திகதி வளாகத்தில் தமிழ்- சிங்கள மாணவ குழுக்களுக்கிடையில் நடந்த மோதல் சம்பவமொன்றின் எதிரொலியாக ஏற்கனவே மறு அறிவித்தல் வரை வந்தாறுமூலை வளாகம் மூடப்பட்டு மீண்டும் கடந்த 28-ம் திகதி திறக்கப்பட்டது.

பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் முதலாம் மற்றும் இறுதி ஆண்டுகளுக்கான விரிவுரைகள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய ஆண்டுகளுக்கான விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மாணவர்களால் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு மாணவர்கள் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையிலான இந்தப் பிரச்சனையின் எதிரொலியாக மாணவர் பேரவை கலைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மாணவ பேரவை தலைவர் எஸ். கோமகன் உட்பட 4 பேருக்கு விரிவுரைகளுக்கு செல்லத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு சிறிய தொகையினரின் அத்துமீறிய செயற்பாடுகள் மற்றும் அடாவடித்தனங்கள் காரணமாக விரிவுரைகளை காலவரையின்றி இடைநிறுத்த நிர்வாகம் முடிவு செய்ததாக துணை வேந்தரான கலாநிதி கே. கோபிந்தராஜா கூறுகின்றார்.

பல்கலைக்கழகத்தில் தற்போது உருவாகியுள்ள வழமைக்கு மாறான சூழ்நிலையின் பின்னணியில் அரசியல்வாதி ஒருவரே இருப்பதாக அவர் குற்றம் சுமத்தினாலும. அந்த அரசியல்வாதியை அடையாளம் காட்ட அவர் மறுத்தும் விட்டார்.

துணை வேந்தருக்கும் மாணவ பிரதிநிதிகளுக்கும் இடையில் தொடர்பாடல் (Communication) துண்டிக்கப்பட்டமையே தற்போதைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்று கலைக்கப்பட்ட மாணவர் பேரவைத் தலைவரான எஸ். கோமகன் கூறுகின்றார்.

மாணவர்களின் பிரச்சனைகளை முன்வைத்து குரல் எழுப்பும் மாணவர்களை அரசியல்வாதிகளுடன் தொடர்புபடுத்துவது உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் தெரிவித்தார்.