ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாதியர் போராட்டத்தால் நாடெங்கிலும் நோயாளிகள் அவதி

இலங்கையில் மருத்துவ தாதிமார் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாடெங்கிலும் 600க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நோயாளிகளின் நலன்கருதி போராட்டத்தைக் கைவிடுமாறு சுகாதார அமைச்சர் தாதியர் தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வழமையான மருத்துவ தாதிமாருக்கு பிரசவ அறை பயிற்சிகள் வழங்குவதை நிறுத்துமாறு மகப்பேற்று-தாதிமார் கோரிக்கை விடுத்துவருவதால் இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையே பொதுவான தாதிமாரின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு காரணமாகியுள்ளது.

அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்தவாறு பயிற்சியிலுள்ள எல்லா தாதிமாருக்கும் பிரசவ அறைப் பயிற்சி வழங்க வேண்டும் என்று தாதிமாரின் தொழிற்சங்கங்கள் வலியுறுத்திவருகின்றன.

ஆனால், பொதுவான மருத்துவமனை தாதிமாருக்கு பிரசவ அறை பயிற்சி கொடுப்பதை மகப்பேற்று தாதிமார் விரும்பவில்லை.

ஒரு தொழிற்சங்கம் போராட்டத்தைக் கைவிடுகிறது

Image caption பொதுவான தாதியருக்கு பிரசவ அறைப் பயிற்சி கொடுப்பதற்கு மகப்பேற்று தாதிமார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

ஆரம்பத்தில் ஓரிரு மருத்துவமனைகளில் தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம் தற்போது நாடு தழுவிய போராட்டமாக மாறியுள்ளது.

எனினும், சுகாதார அமைச்சின் முன்னெடுப்பில் திறைசேரியின் செயலாளர் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவொன்று பிரச்சனையை

தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக துணை சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதன்படி, அரசாங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தொழிற்சங்கங்களில் ஒன்று நாளை திங்கட்கிழமை முதல் போராட்டத்தைக் கைவிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும் தமது கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வு கிடைக்காதபடியால் போராட்டம் தொடரும் என்று மற்ற தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், தாதியரின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தால் கர்ப்பிணித் தாய்மார் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.