இலங்கையின் புனானைக் காட்டில் ரயில் மோதி இரண்டு யானைகள் பலி

பலியான யானைகளில் ஒன்று
Image caption பலியான யானைகளில் ஒன்று

இலங்கையில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு திங்கட்கிழமையன்று அதிகாலை இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டம் புனானை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் புகையிரத பாதையை கடக்க முற்பட்ட வேளையிலே இரண்டு யானைகளும் புகையிரதத்தில் மோதுண்டதாக வாழைச்சேனை காவல்துறை கூறுகிறது.

குறித்த இரண்டு ஆண் யானைகளும் 25 தொடக்கம் 30 வயதுக்கும் இடைப்பட்டவையாக இருக்கலாம் என வன ஜீவராசிகள் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

சம்பவம் நடந்த புனானைக் காட்டுப் பகுதி யானைகளின் நடமாட்டம் அதிகரித்த பிரதேசமாகும்.

காட்டு யானைகளினால் அந்த பகுதியில் குடியிருப்பாளர்களும் நெல் மற்றும் விலங்கு வேளாண்மை செய்கையாளர்களும் இழப்புகளை தொடர்ந்தும் சந்திப்பதாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

காடுகளிலிருந்து மாலை வேளைகளில் வெளியேறி நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரத பாதை யோரங்களில நடமாடும் யானைகள் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அழிவுகளை ஏற்படுத்துவதாக பிபிசி தமிழோசையுடன் பேசிய உள்ளுர் மக்கள் கூறினர்.

அதிகாலை வேளை வழமை போல் மக்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறி காட்டிற்குள் திரும்பும் போதே எதிர்பாராத இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்னரும் இதேயிடத்தில் புகையிரதத்தில் மோதுண்டு யானையொன்று உயிரிழந்த சம்பவத்தை அவர்கள் நினைவுபடுத்தினர்.

யானை பாதுகாப்புக்கான மின்சார வேலிகள் அமைப்பதன் மூலமே மக்களும் யானைகளுக்கும் பாதுகாப்பை பெற முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.