'தம்புள்ள பள்ளிவாசலுக்கு மாற்றுக் காணி'

'தம்புள்ள பள்ளிவாசலுக்கு மாற்றுக் காணி'
Image caption 'தம்புள்ள பள்ளிவாசலுக்கு மாற்றுக் காணி'

மாத்தளை மாவட்டம், தம்புள்ளையில் சர்ச்சைக்குரிய முஸ்லிம் பள்ளிவாசலுக்கு பொருத்தமான மாற்றுக் காணி ஒன்றை வழங்க அரசாங்கம் முன்வந்ததாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை, பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.

தம்புள்ள நகரத்தில் உள்ள பௌத்த வழிபாட்டிடம் ஒன்றை மையப்படுத்தி, அந்தப் பகுதி புனித பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து,அங்கிருந்த பள்ளிவாசலை அகற்றுமாறு குறித்த பௌத்த வழிபாட்டிடத்தைச் சேர்ந்த மதகுருமார் வற்புறுத்தி வருவதால், அங்கு பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

பேச்சுவார்த்தையின் போது தமக்கு பொருத்தமான காணியை வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வந்ததால், தாம் அப்படியான ஒரு சூழ்நிலையில் அங்கிருந்து வெளியேற தயார் என்று அவர்களிடம் தெரிவித்ததாக, பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவர் அஹமட் லெப்பை அவர்கள் பிபிசியிடம் கூறினார்.