'நரேந்திர மோடி அரசுடன் முரண்பாடுகள் எழாது': இலங்கை நம்பிக்கை

Image caption 'ஆட்சிகள் மாறினாலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறாது': இலங்கை

இந்தியாவின் அண்டை நாடு, நட்பு நாடு, சர்வதேச மட்டத்திலும் அதே நட்புறவுடன் செயற்படுகின்ற நாடு என்ற வகையில் இலங்கை, இந்தியாவின் புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கு தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக அரசாங்கக் கட்சியின் தலைமை கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் புதிய பிரதமராகின்ற நரேந்திர மோடிக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவரதன கூறினார்.

நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

'இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையாக இலங்கையுடன் ஒத்துழைத்துச் செயற்பட்டுள்ளது' என்றார் தினேஷ் குணவர்தன.

பலமான அரசியல் கட்சியாக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்துள்ளது என்றும் இடைக்கிடையே எதிர்க்கட்சியிடம் ஆட்சி மாறியிருக்கிறது என்றும் கூறிய இலங்கை அமைச்சர், 'எனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே எந்தவொரு கருத்து முரண்பாடும் எழாது' என்றார் .

இந்தியாவின் தெளிவான வெளியுறவுக் கொள்கையின்படி பாரதிய ஜனதாக் கட்சியும் நடந்துகொள்ளும் என்றும் இலங்கை அரசாங்கத்தின் தலைமை கொறடா நம்பிக்கை வெளியிட்டார்.

'இலங்கைக்கு நல்லதே': ஐதேக

Image caption 'மன்மோகன் சிங் அரசாங்கம் மாநிலங்களுக்கு அடிபணிந்து கிடந்தது': ஐதேக

இதனிடையே, இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையில் பலமான அரசாங்கம் அமைவது 'இலங்கைக்கு நல்லது' என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் தெரிவித்துள்ளது.

மத்தியில் பலமான ஆட்சி அமைவதன் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரியான முறையில் கடைப்பிடிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

'மன்மோகன் சிங்கின் காலத்தில் தில்லியில் பலமான அரசாங்கம் இருக்கவில்லை. அவர்கள் மாநில அரசாங்கங்களுக்கு அடிபணிந்து இருந்தனர்' என்றார் லக்ஷ்மன் கிரியெல்ல.

'மோடி இனிமேல் வெளியுறவு விவகாரங்களில் நேரடியான முடிவுகளை எடுக்கமுடியும்' என்றும் கிரியெல்ல தமிழோசையிடம் தெரிவித்தார்.

மன்மோகன் சிங்கின் அரசாங்கம் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கின்றபோது, தயங்கித் தயங்கியே தீர்மானங்களை எடுத்துவந்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

இலங்கை இந்தியாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நரேந்திர மோடியின் அரசாங்கம் நேரடியான தீர்மானங்களை எடுக்கும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.