ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'கிழக்கு மாகாணசபை தமிழ்க் கிராமங்களை புறக்கணிக்கிறது'

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption 'கிழக்கு மாகாண முதலமைச்சர் கடந்த ஆண்டு அளித்த உத்தரவாதத்தை மீறிவிட்டார்'

கிழக்கு மாகாணசபை தமிழ் மக்களையும் தமிழர் பிரதேசங்களையும் திட்டமிட்டு புறக்கணித்து, இனரீதியாகச் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையினால் இந்த ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளிலும் தமிழ் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – 4 அம்பாறை– 4 மற்றும் திருகோணமலை– 2 என்ற எண்ணிக்கையில் மாகாணத்தில் 10 கிராமங்கள் இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் 18 சதவீதமான தமிழர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு தமிழ் கிராமங்களும் உள்ளடக்கப்படவில்லை என்றும் 3 முஸ்லிம் கிராமங்களும் ஒரு சிங்கள கிராமமும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் துரைரெத்தினம் கூறுகின்றார்.

கடந்த ஆண்டிலும் அம்பாறை மாவட்ட தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

'மட்டக்களப்பு மாவட்டத்தில் இன விகிதாசாரத்தின்படி, 3 தமிழ் கிராமங்களும் ஒரு முஸ்லிம் கிராமமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் இரண்டு முஸ்லிம் கிராமங்களும் இரண்டு தமிழ் கிராமங்களும் அங்கு அபிவிருத்திக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன' என்றார் அவர்.

கடந்த ஆண்டு கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் சுட்டிக்காட்டியபோது, இந்த ஆண்டு அப்படி நடைபெற மாட்டாது என்று முதலமைச்சர் உத்தரவாதம் வழங்கியிருந்த போதிலும் அது மீறப்பட்டுள்ளதாகவும் துரைரெத்தினம் குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பில் மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அல்லது அமைச்சர்கள் சார்பான பேச்சாளரின் கருத்துக்கள் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.