புத்தர் உருவத்தை பச்சை குத்திய பெண் இலங்கையிடம் இருந்து நஷ்டஈடு கோருகிறார்

புத்தரின் மேல் உள்ள பக்தியின் காரணமாகவே தான் உருவத்தை பச்சை குத்தியதாக நயோமி கோல்மன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். படத்தின் காப்புரிமை AFP
Image caption புத்தரின் மேல் உள்ள பக்தியின் காரணமாகவே தான் உருவத்தை பச்சை குத்தியதாக நயோமி கோல்மன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கௌதம புத்தரை அவமதித்ததாக குற்றஞ்சாட்டி பலவந்தமான முறையில் தன்னை நாடு கடத்தியதை ஆட்சேபித்து இலங்கை அரசாங்கத்திடமிருந்து பத்து மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி நயோமி மிஷேல் கோல்மன் எனும் பிரிட்டிஷ் பெண்மணி இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சட்ட மா அதிபர், கட்டுநாயக்க போலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மாதகால விடுமுறைக்காக தான் இலங்கை சென்றதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அப்போது தனது கைகளில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருந்தமை காரணமாக தன்னை கைதுசெய்த அதிகாரிகள், போலிசாரிடம் ஒப்படைத்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

பின்பு நீபதியின் உத்தரவிற்கு அமைய விளக்க மறியலில் வைக்கப்பட்டு பலவந்தமான முறையில் நாடுகடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தபோது சில சிறைச்சாலை அதிகாரிகள் தன் மீது பாலியல் ரீதியில் பல துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், இதன் மூலம் மனரீதியாக தான் பாரிய அளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புத்தரை அவமதிக்கும் நோக்கம் தன்னிடம் இருக்கவில்லை என்று தெரிவித்துள்ள மனுதாரர், தனது உரிமை மீறல் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஒரு கோடி ரூபாவை நஷ்டஈடாக பெற்றுத்தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த மனு சம்பந்தமாக கருத்துக்களை தெரிவித்த சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, சம்பந்தப்பட்ட பெண்மணியை கைதுசெய்து நாடு கடத்துவதற்கு அதிகாரிகள் எடுத்த முடிவு சட்டவிரோதமானதென்று கூறினார்.

"ஒரு நபர் தான் விரும்பும் மதத் தலைவரின் உருவத்தை உடம்பில் பச்சை குத்திக்கொள்ள முடியும். புத்தர் மீது வைத்திருக்கும் அதிக பக்தி காரணமாகவே இவர் பச்சை குத்தியிருந்தார். அது எப்படி புத்தரை அவமதிப்பதாக ஆகும்? எனவே இது ஒரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு " என சட்டத்தரணி குணரத்தன வன்னிநாயக்க தெரிவித்தார்.