'தீய சக்திகளே ஆசிரியர்களை மிரட்டியுள்ளன' - இராணுவ தளபதி

'தீய சக்திகளே ஆசிரியர்களை மிரட்டியுள்ளது' - இராணுவ தளபதி
Image caption 'தீய சக்திகளே ஆசிரியர்களை மிரட்டியுள்ளன' - இராணுவ தளபதி

யாழ் பல்கலைக்கழகத்திற்கும் இராணுவத்திற்கும் இடையில் முரண்பாட்டை உருவாக்குவதற்கு முயன்றுள்ள சில தீய சக்திகளே பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரு தினங்களுக்கு முன்னர் இந்த அச்சுறுத்தல் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டிருந்தது குறித்து, அவரிடம் கேட்டபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பின்றி நல்ல முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இராணுவத்தின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தினுள்ளே துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த அவர், இது ஊடகங்களிலேயே வெளிவந்திருக்கின்ற போதிலும், அது தொடரபில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவம் இல்லையெனவும், புதன்கிழமை அங்கு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும், அதன் காரணமாகவே தாங்கள் அதனைத் தடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தால், அதனைக் கட்டாயம் தாங்கள் தடுத்து நிறுத்தியிருப்போம் என்றும், பொதுமக்களின் இறப்பை அரசியலாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இராசகுமாரன் விசாரணை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டதற்கும், யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி கூறினார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரனுக்கும் புலம்பெயர்ந்துள்ள விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாகப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பிலேயே அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.