'தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் கைது'

'தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் கைது'
Image caption 'தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் கைது'

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியில் உள்ள பொதுமக்களின் காணிகள், வீடுகள் என்பவற்றை விடுவித்து, அவற்றில் அவர்களை மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் எனக்கோரி வரும் திங்கட்கிழமை போராட்டம் நத்தப்பட இருந்த வேளை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டம் தொடர்பில் கடந்த புதன்கிழமை ஜெகதீஸ்வரன் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததையடுத்து, போராட்டம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த தினத்தன்று முக்கிய பிரமுகர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவிருப்பதனால், அந்தப் போராட்டத்தை நடத்த வேண்டாம் என்று கிளிநொச்சி காவல்நிலையத்திற்கு அவரை அழைத்து, காவல்துறையினர் எச்சரிக்கை செய்திருந்தனர். அதேநேரம் ஜனநாயக ரீதியிலான இந்தப் போராட்டம் குறித்து கட்சியின் செயலாளர் என்ற வகையில் தான் கிளிநொச்சி காவல்துறையினருக்கு எழுத்து மூலமாகக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் ஜெகதீசனின் குடும்பத்தினரும் ஏனைய கட்சி உறுப்பினர்களும் அச்சுறுத்தப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் குமரபுரத்தில் உள்ள ஜெகதீஸ்வரனின் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை இரவு பத்தரை மணியளவில் சென்ற பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் அவரைக் கைது செய்து கொண்டு சென்றிருப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜனநாயக முறைப்படி மக்கள் தமது உணர்வுகளையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதை தடுக்கும் வகையில் காவல்துறையினரும், பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரும் செயற்பட்டிருப்பதாகச் கூறியுள்ள கஜேந்திரன் கண்டனத்திற்குரிய இந்தச் செயலைக் கைவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள தமது கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருக்கின்றார்.