மாத்தளை புதைகுழி "எலும்புகளில் சித்ரவதை அடையாளம்"

மாத்தளையில் மனிதப் புதைகுழி ஒன்று 2012ல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது படத்தின் காப்புரிமை AP
Image caption மாத்தளையில் மனிதப் புதைகுழி ஒன்று 2012ல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது

மாத்தளை மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆராய்ந்ததில் இறந்தவர்கள் மரணமடைவதற்கு முன் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை பரிசோதனை செய்த குருநாகலை சட்ட வைத்திய அதிகாரி மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளதாக காணாமல்போனோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் வடகள தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட புதைகுழியிலிருந்து 153 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் சிலவற்றின் உள்ளே இரும்பு ஆணிகள் இருந்ததாகவும் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

விரல்களும் உடம்பின் வேறு பல பாகங்களிலும் கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் தெரிவதாக வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கையில் சித்ரவதைக்கான அடையாளங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த மரணங்களை கொலைக் குற்றச்சாட்டாக கருதி வழக்கு நடத்த வேண்டுமென நீதிவான் பரிந்துரைக்க வேண்டும் என்று தாம் கோரியுள்ளதாக வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

மாத்தளை புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் 1988-89 காலப்பகுதியில் இலங்கையில் நடந்த கலவரங்களின்போது காணாமல்போனவர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ள அவர்களது உறவினர்கள், இது சம்பந்தமாக விசாரிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை மேலதிக விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பிவைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.