'போராட்டக்காரர்கள் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் அல்ல': இராணுவம்

படத்தின் காப்புரிமை pccsl.lk
Image caption இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய

கிளிநொச்சி நகரில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள காணிகளை மக்களிடம் ஒப்படைக்குமாறு இன்று புதன்கிழமை போராட்டம் நடத்தியவர்கள் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் காணிகளை உரிமைகோருவதற்கான சட்டபூர்வ ஆவணங்கள் இருக்கவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகமையத்தில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவப் பேச்சாளர் கூறினார்.

'வீதியில் நின்ற ஒருவர் கணக்குப் பார்த்ததில், அந்தப் போராட்டத்தில் வெறும் 42 பேர் தான் கலந்துகொண்டிருந்தனர். சாவகச்சேரியிலிருந்து பஸ்ஸில் கொண்டுவரப்பட்டவர்கள் தான். கிளிநொச்சியில் காணி கேட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர். கிளிநொச்சியில் இருந்து யாரும் அதில் கலந்துகொண்டதாக எங்களுக்குத் தெரியவில்லை' என்றார் வணிகசூரிய.

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் நடத்திய இடத்தை ஒட்டிய காணியை வழங்குமாறு கோரியே அவர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்றும் அவர் கூறினார்.

'விடுதலைப் புலிகள் தமது தலைமைப் பிரதேசமாகப் பயன்படுத்திவந்த காணியையே இப்போது இவர்கள் கேட்கிறார்கள். அந்தக் காணியை இராணுவம் கைப்பற்றி தற்போது அங்கே நிலைகொண்டிருக்கிறது. இந்த காணிப்பிரதேசத்திற்கு பல உரிமையாளர்கள் இருந்தபோதிலும், எவரிடம் காணி உரிமைப் பத்திரங்கள் கிடையாது. பலரும் உரிமை கோருகின்றனர்' என்றார் இராணுவப் பேச்சாளர்.

சட்டப்படியான ஆவணங்கள் மூலம் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள 108 ஏக்கர் காணிப் பிரதேசம் கடந்த நாட்களில் கிளிநொச்சிப் பிரதேச மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.