சம்பூரில் தொடரும் அகதிகளின் பிரச்சினைகள்

சம்பூரில் தொடரும் அகதிகளின் பிரச்சினைகள் படத்தின் காப்புரிமை bbc
Image caption சம்பூரில் தொடரும் அகதிகளின் பிரச்சினைகள்

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் இந்திய உதவியுடன் அமையவுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்காக பொது மக்களின் காணிகள் எதுவும் சுவீகரிக்கப்படவில்லை என இலங்கை எரிசக்தி மற்றும் மின் சக்தி அமைச்சு கூறுகின்றது.

இந்தியாவின் புதிய பிரதமரான நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள புதுடெல்லி சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ கடந்த செவ்வாய்கிழமை இந்திய பிரதமருடனான பேச்சுவார்த்தையொன்றிலும் கலந்து கொண்டார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கான வேலைகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அசவர உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் இது தொடர்பான ஒப்பந்தமொன்று ஆறு மாதங்களுக்கு முன்னதாக கைச்சாத்திடப்பட்ட போதிலும் இதுவரை வேலைகள் எதுவும் ஆரம்பிக்கப்படாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

சம்பூர் பிரதேச மக்களை பொறுத்தவரை போர் முடிவடைந்தாலும் தங்களது சொந்த கிராமங்களில் வாழ்விட உரிமை மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தற்காலிக இடங்களில் அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

அந்தப் பிரதேசம் இப்போத அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயமாகவும் வர்த்தக வலயமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு 500 ஏக்கர் நிலம் அனல் மின் நிலையத்திற்கும் அடையாளமிடப்பட்டு காணப்படுகின்றது.

இந்திய உதவியுடனான அனல் மின் நிலையத்திற்காக அடையாளமிடப்பட்ட காணியில் பொது மக்களுக்குரிய காணிகளும் இருப்பதாக சம்பூர் பிரதேச வாசியான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் கூறுகின்றார்.

ஆனால், அனல் மின் நிலையத்திற்கு என காணி ஆணையாளர் நாயகத்தினால் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள 500 ஏக்கர் காணி, அரச வெற்றுக் காணி என மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம். சி. பெர்ணாண்டோ அதனை மறுக்கின்றார்.

குறித்த அனல் மின் உற்பத்தி நிலையம் காரணமாக பொது மக்களுக்கு காணி இழப்பு ஏற்படுவதாக கூறுவதற்கு இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

''அனல் மின் நிலையத்திற்கு அடையாளமிடப்பட்ட காணியில் ஏற்கனவே வாழ்ந்த ஏழு குடும்பங்களும் தற்போது மாற்று குடியிருப்பு வசதிகளை பெற்றுள்ளதால் அங்கு குடியிருப்பு காணிகள் இழக்கப்படவில்லை. ஆனால் பொது மக்களுக்குரிய சுமார் 200 ஏக்கர் வயல் நிலங்கள் இழக்கப்படுகிறது'' என்று கிழக்கு மகாண சபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் இங்கு சுட்டிக்காட்டுகின்றார்.