தங்காலை துப்பாக்கிச் சூடுகள்: நாமல் மீது குற்றச்சாட்டு

Image caption மங்களவின் குற்றச்சாட்டை அரசு மறுக்கிறது

இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை நகரில் ஜனாதிபதியின் குடும்பத்தாரை விமர்சிப்போர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்துவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார். தங்காலை நகரில் நேற்று பகல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவரது நண்பர் கடந்த வாரம் தங்காலை நீதிமன்ற வளாகத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டில் காயத்துடன் தப்பிய சம்பவத்தையும் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, இந்த சம்பவங்களுடன் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறினார்.

ஜனாதிபதியின் சொந்த வீடு அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்புப் பிரதேசமான தங்காலையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்த கொலையாளிகளால் எப்படி முடிந்தது என்றும் மங்கள சமரவீர கேள்வி எழுப்பினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவின் கருத்துக்களைப் பெற பிபிசி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஆனால், காவல்துறை பேச்சாளரும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.

'மங்கள சமரவீர சுமத்துவது பாரதூரமான குற்றச்சாட்டு. சாட்சியங்களை மறைப்பதும் சட்டவிரோதமானது. எந்த நேரத்திலும் அவர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சாட்சியங்களை முன்வைக்கலாம்' என்றார் அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல.