காணாமல்போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு காத்தான்குடியில்

Image caption 1990-ம் ஆண்டில் விடுதலைப்புலிகளினால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் உறவினர்கள் சாட்சியம்

இலங்கையில் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் நடைபெற்றது.

இன்றைய அமர்வின் போது விடுதலைப்புலிகளினால் கடத்தப்பட்டு காணாமல்போனதாக கூறப்படும் முஸ்லிம்கள் தொடர்பாகவே அனேகமானோர் சாட்சி அளித்துள்ளனர்.

காத்தான்குடி பிரதேசத்திலிருந்து குறிப்பாக முஸ்லிம்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நாளை சனிக்கிழமையும் காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் அமர்வு நடைபெறுகின்றது.

காத்தான்குடி பிரதேசத்திலிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் பேரில் இன்றும் 102 பேர் சாட்சியமளிப்பதற்கு ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று முதல் நாள் நடைபெற்ற அமர்வின் போது 59 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்த போதிலும் 52 பேர் சாட்சியமளித்திருந்தார்கள். இவர்களில் கூடுதலாக பெண்களே வருகை தந்திருந்தனர்.

சாட்சிகளில் அனேகமானோர் 1990ம் ஆண்டு ஜுலை 7ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடத்தில் முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளினால் கடத்தப்பட்டு காணாமல்போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே சாட்சியம் அளித்தார்கள்.

இந்த சம்பவத்தில் 175ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளினால் வழிமறிக்கக்பட்டு கடத்தப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக முஸ்லிம்களினால் கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக சாட்சியமளித்த சாட்சிகள் காணாமல் போனவர்கள் சடலமாக புதைக்கப்பட்டுள்ள இடங்களும் தற்போது தெரியவந்துள்ள நிலையில், தங்களது மார்க்க கடமைகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன் வைத்தனர்.

காத்தான்குடி பிரதேசத்திற்கான விசாரணைகள் முடிந்த பின்னர் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேசத்திலிருந்து கிடைத்துள்ள முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் ஆரையம்பதி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றன.