தாக்கப்பட்ட வாகனங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'பொதுபல சேனா பொதுச் செயலரின் பேச்சே வன்முறைக்கு காரணம்' : அமைச்சர் ஃபௌசி

Image caption தாக்குதலின் சேதங்கள்

இலங்கையில் இனி மதக் கலவரங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அண்மையில் களுத்துறை மாவட்டம், அளுத்கமப் பகுதியில் கடும்போக்கு பௌத்த அமைப்பு என்று கருத்தப்படும் பொதுபல சேனாவுக்கும், உள்ளூர் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அரசின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜயரட்ண தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டதில், பசில் ராஜபக்ஷ, மைத்ரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, ஃபௌசி உட்பட பல அமைச்சர்கள் பங்குபெற்றுள்ளனர்.

Image caption பொதுபல சேனா பொதுச் செயலர் மீது குற்றச்சாட்டுகள்

பௌத்த மதத் தலைவர்களும் பங்குபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் உள்ள உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், மத ஒற்றுமை ஏற்பட்டு இனியும் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சர் ஃபௌசி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலரின் மத உணர்வுகளைத் தூண்டும் பேச்சே அளுத்கமப் பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கு காரணம் என்றும் அமைச்சர் ஃபௌசி கூறுகிறார்.

இதனிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, இன்று நாடாளுமன்றத்தில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் அமைச்சர்களும் கோரினர் என்று அமைச்சர் ஃபௌசி தெரிவித்தார்.

பலர் கைது

Image caption ஊரடங்கு உத்தரவு தொடருகிறது

அளுத்கமப் பகுதியில் காவல்துறையினர் பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவை மீறியதான குற்றச்சாட்டில் 44 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் அஜித் ரோஹண பிபிசியிடம் தெரிவித்தார்.

இவர்களில் 25 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், மற்றவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை இந்த ஊரடங்கு உத்தரவு இன்று நான்கு மணி நேரங்கள் தளர்த்தப்பட்டிருந்தாலும், மறு அறிவித்தல் வரும்வரை அது அமலில் இருக்கும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கேகாலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவனல்லை நகரில் இன்று பொதுபல சேனா அமைப்பினர் நடத்தவிருந்த ஒரு கூட்டதுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை உத்தரவுவொன்றை பெற்று அதை அமல்படுத்தியுள்ளதகவும் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.