முஸ்லிம் பிரதேசங்களில் கடையடைப்பு

முஸ்லிம் பிரதேசங்களில் கடையடைப்பு
Image caption முஸ்லிம் பிரதேசங்களில் கடையடைப்பு

இலங்கையில் களுத்துறை மாவட்டம் பேருவளை மற்றும் அளுத்கம சம்பவங்கள் உட்பட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள அநேகமான முஸ்லிம் பிரதேசங்களில் இன்று புதன்கிழமை கடையடைப்பு, ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை , சாய்ந்தமருது , சம்மாந்துறை , அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உட்பட அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு அனுஷ்டிக்கப்படுவதால் அந்தப் பிரதேசங்களில் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

உள்ளுர் மற்றும் வெளியிடங்களுக்கான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நெடுஞ்சாலைகளும் வீதிகளும் மக்கள் நடமாட்டங்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இலங்கையில் முஸ்லிம்களை பெருன்பான்மையாக கொண்ட மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் இன்றைய தினம் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கான அழைப்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் உலமா சபை ஆகியவற்றால் கூட்டாக விடுக்கப்பட்டிருந்தது.

பொது பலசேனாவினால் முன்னெடுக்கப்படுகின்ற இன ரீதியான நடவடிக்கையில் தங்கள் உயிர்களையும் உடமைகளையும் பொருளாதாரத்தையும் இழந்து, நிர்க்கதியாகி, பதற்றத்துடனும் பீதியுடனும் வாழும் தமது சகோதரர்களுக்காக இன்று துக்கம் அனுஷ்டித்து விஷேட பிராத்தனைகளிலும் ஈடுபடுமாறு அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் உலமா சபை ஆகியன கூட்டாக இது தொடர்பில் விடுத்த அறிவித்தலில் முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் கடையடைப்பு ஹர்த்தால் தொடர்பான அறிவித்தல்கள் பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் வெளியானதாக உள்ளுர் மக்கள் கூறுகின்றார்கள்.

இம் மாவட்த்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலே இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது. தமிழ் பிரதேசங்களிலும் சிங்கள பிரதேசங்களிலும் வழமை நிலை காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.