இலங்கை: பாகிஸ்தான் பிரஜைகளுக்கான 'ஆன்-அரைவல்' வீசா ரத்து

படத்தின் காப்புரிமை AFP Getty Images

பாகிஸ்தான் பிரஜைகள் இலங்கை விமானநிலையத்தில் பெற்றுவந்த உடனடி வீசா (on-arrival visa) நடைமுறையை இலங்கை அரசு ரத்துசெய்துள்ளதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரியான தஸ்னீம் அஸ்லம் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் அரசியல் தஞ்சம் பெற்றுவரும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்ற பின்னணியிலேயே இந்த வீசா நடைமுறை ரத்து செய்யப்படுகின்றது.

பாகிஸ்தானிய பிரஜைகளுக்கான விமானநிலைய வீசா நடைமுறை ரத்து செய்யப்படுகின்றமை தொடர்பில் இலங்கை அரசு தமக்கு அறிவித்துள்ள போதிலும், இந்த முடிவை எடுப்பது பற்றி தம்முடன் ஏற்கனவே கலந்துரையாடப்படவில்லை என்றும் தஸ்னீம் அஸ்லம் கூறியுள்ளார்.

ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட பாகிஸ்தானியர்கள் சுமார் 1,500 பேர் இலங்கை குடிவரவுத்துறை மற்றும் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இலங்கை அதிகாரிகளின் அதிகாரபூர்வ கருத்துக்கள் பிபிசிக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை.