"ஐநா. விசாரணையில் சாட்சியமளிப்பவர்களை அரசாங்கம் தண்டிக்க முடியாது"

சுரேஷ் பிரேமச்சந்திரன்
Image caption பாதிப்பு பற்றி மக்கள் பேசினால் தண்டிப்பதா என சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்புகிறார்.

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் ஆரம்பமாகவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அரசாங்கம் கூறுவதைக் கண்டிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை சாட்சியமளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் திங்களன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், சாட்சியமளிப்பவர்கள் நாட்டின் தேசிய இரகசியங்களை வெளிப்படுத்தினார்கள் எனக் கூறி தண்டிக்க முடியாது என குறிப்பிட்டார்.

அத்துடன் அவர்களைப் பங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"நாட்டின் இரகசியங்களைக் காப்பது, ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்குரிய சத்தியப் பிரமாண அடிப்படையிலான பொறுப்பாகும். அந்தப் பொறுப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடையாது." என அவர் கூறியிருக்கிறார்.

சர்வதேச விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியமளிப்பதை அரசாங்கம் தடுக்குமேயானால், அதுவும் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கே வழிவகுக்கும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது வலியுறுத்தி கூறியிருக்கிறார்.