இலங்கை முஸ்லீம் 'புதைகுழிகளில்' அகழாய்வு ஒத்திவைப்பு

Image caption நீதிமன்றத்துக்கு வெளியே முறைப்பாட்டளர்கள்

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடத்தில் 24 வருடங்களுக்கு முன்பு விடுதலைப்புலிகளினால் கடத்திக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படவிருந்த அகழ்வுப் பணிகள் ஆகஸ்டு 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ரியால் இன்று அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அகழ்வுப் பணிகளின் போது சட்ட மருத்துவ நிபுணர் மற்றும் அரச பகுப்பாய்வாளர் துறை பிரசன்னம் போன்ற விடயங்களை குறிப்பிட்டு இதற்கான கால அவகாசம் வேண்டி இன்று நீதிபதி முன்னிலையில் பொலிஸாரால் அறிக்கையொன்றை முன் வைக்கப்பட்டது.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்தப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் 18ம் தேதி வரை ஒத்திவைப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் 1990ம் ஆண்டு யுத்த நிறுத்தம் முறிந்து மீண்டும் போர் ஆரம்பமானபோது , விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக எடுத்ததாகக் கூறப்படும் சில நடவடிக்கைகளில் இந்தச் சம்பவமும் முஸ்லிம்களினால் குறிப்பிடத்தக்க சம்பவமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

1990ம் ஆண்டு ஜுலை 12ம் திகதி மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் பயணம் செய்த வேளை தமது பிரதேசத்தை சேர்ந்த 165 முஸ்லிம்கள் சம்பவ தினத்தன்று விடுதலைப்புலிகளினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் கூறுகின்றர்கள்.

படுகொலை செய்யப்பட்டவர்கள் குருக்கள்மடம் கடலோரப்பகுதியிலேயே புதைக்கப்பட்டுள்ளதாகவே அவர்களில் பலரும் நம்புகின்றார்கள்.

காத்தான்குடி நகர சபை உறுப்பினரான மஜித் ஏ. ரவுப் தமது உறவினர்கள் இருவர் தொடர்பாகவே பொலிஸில் செய்திருந்த முறைப்பாடொன்றின் பேரில் பொலிஸாரால் நீதிமன்றத்தில் புதைகுழிகள் அகழ்வு தொடர்பாக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கை கடந்த திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டபோதே நீதிமன்றம் இன்று அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நடிவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது