மது விற்பனைக்கு எதிராக மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

Image caption மட்டக்களப்பில் மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போருக்கு பின்னர் அதிகரித்துள்ளதாக கூறப்படும் மது பாவனை மற்றும் விற்பனக்கு எதிராக இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நகரில் பெண்கள் ஒன்று கூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்தி சதுக்கம் முன்பாக ஓன்று கூடிய பெண்கள் அங்கிருந்து பதாகைகளையும் வாசக அட்டைகளையும் ஏந்தியவாறு மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று ஜனாதிபதிக்கான மனுவொன்றையும் அரசாங்க அதிபர் பி. எம். எஸ். சார்ள்ஸிடம் கையளித்தனர்.

மகஜர்களை பெற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் இது தொடர்பிலான உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அங்கு பதில் அளித்தார்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச மகளிர் அமைப்புகளின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவன ஈர்ப்பு போராட்டத்திலும் பேரணியிலும் குடும்ப பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் கலந்து கொண்டார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை வறுமை , மற்றும் புற்று நோய் ஆகியவற்றில் மாத்திரமல்ல மதுப் பாவனையிலும் தற்போது முன்னனி வகிப்பதாக மண்முனை வடக்கு பிரதேச மகளிர் சம்மேளனம் கவலை வெளியிட்டுள்ளது.

மாதாந்தம் இம் மாவட்டத்தில் சுமார் 40 கோடி ருபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தங்களால் திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் அறிய முடிந்துள்ளதாக சம்மேளத்தின் ஏற்பாட்டாளரான செல்வி மனோகர் கூறுகின்றார்.

அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் படி கிழக்கு மாகாணத்தில் 84 மதுபான கடைகள் இருக்க முடியும். ஆனால் அதில் 64 மதுபான கடைகளை கொண்ட மாவட்டமாக தற்போது மட்டக்களப்பு மாவட்டம் விளங்குவதாகவும் செல்வி மனோகர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஜனாதிபதிக்கு தங்களால் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில், அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகளின் எண்ணிக்கைகள் குறைக்கப்பட வேண்டும், புதிதாக மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட கூடாது, பள்ளிக்கூடங்கள், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது இடங்களுக்க அருகாமையிலுள்ள மதுபான கடைகள் அகற்றப்பட வேண்டும், அதிக செறிவுள்ள மதுபானங்களின் விற்பனை மட்டக்களப்பு மாவட்டத்தில் தடை செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

தமது கோரிக்கைகள் மற்றும் போராட்டத்தை பொறுத்தவரை முழுமையான வெற்றியைத் தராவிட்டாலும் ஓரளவு வெற்றியை தரலாம் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இந்த போராட்டத்தில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் செல்வி மனோகர் குறிப்பிட்டார்.