கொடுப்பனவுகள் வரவில்லை: ஊனமுற்ற இராணுவத்தினர் வழக்கு

ரஞ்சித் விக்கிரமசிங்க
Image caption ஊனமுற்ற இராணுவத்தினரின் மாதாந்த கொடுப்பனவுகளை இராணுவ நிர்வாகம் நிறுத்திவைத்துள்லதால் தாம் மிகவும் கஷ்டப்படுவதாக ரஞ்சித் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் யுத்ததின்போது உடற்திறன் பாதிக்கப்பட்ட ராணுவத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்த கொடுப்பனவுகளை பெற்றுத்தருமாறு கோரி ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் தாக்கல் செய்த மனுவில், அரசாங்கம் பதிலளிக்க மேன்முறையீட்டு அரசாங்கம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

உதவித் தொகைகளை பெற்றுத் தருமாறு கோரி ஊனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் 292 பேர் சார்பில் ஊனமுற்ற ராணுவ உறுப்பினர்கள் சங்கம் மனுத் தாக்கல் செய்திருந்தது.

ஊனமடைந்த காரணத்தினால் இராணுவத்தை விட்டு நீக்கப்படும் படையினர் 55 வயதில் ஓய்வூதிய தொகையை பெறும்வரை அவர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என ராணுவ சட்ட விதிகள் கூறுகின்றன என்றாலும், அவ்வாறு சம்பளம் வழங்குவதை இராணுவ நிர்வாகம் நிறுத்திவைத்துள்ளதாக ஊனமுற்ற ராணுவ உறுப்பினர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் விக்கிரமசிங்க கூறினார்.

இதன் காரணமாக தமது சங்கத்தின் உறுப்பினர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாவதால், இந்த வழக்கை தாம் தொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அரச தரப்பு சட்டத்தரணி கால அவகாசம் கோரியதை அடுத்து 28 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.