யாழ்ப்பாண ஆர்ப்பாட்டம் நீதிமன்றத் தீர்ப்பால் நிறுத்தப்பட்டது

Image caption கண்டனக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பங்கேற்பு

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பு உட்பட பல்வேறு அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ஆர்ப்பாட்டம் நீதிமன்ற உத்தரவு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகள் இராணுவ தேவைக்காக அபகரிக்கப்படுவது, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தொடர்ந்து மீன்பிடிப்பது ஆகியவைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.

இதுவிடயத்தில் நாட்டின் தென்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமைப்புக்களின் ஒத்துழைப்பைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவுமே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது என்று தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பின், வடகிழக்குப் பகுதிக்கான இணைப்பாளர் ஜேசுதாசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஒரு ஜனநாயக நாட்டில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதை, நாடக பாணியில் நீதிமன்ற உத்தரவு ஒன்றின் மூலம் தடைசெய்திருப்பது வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்தரப்பினர் பங்கேற்பு

Image caption பிக்குமார்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்

நாட்டின் தென்பகுதியில் இருந்து பௌத்த பிக்குகள், கிறிஸ்தவ அருட் தந்தையர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையில் வந்திருந்தவர்களுடன் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெருமளவு மக்களும் இந்தக் கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பட்டவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

நீர்கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செயற்பட்டு வருவதாகவும் அந்த வகையிலேயே யாழ்ப்பாணத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கண்டனப் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருநததாவும் ஜேசுதாசன் கூறுகிறார்.