'ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட்ட வேண்டும்': அமைச்சர் டியூ

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption டியூ குணசேகர தற்போது 'மூத்த அமைச்சர்' என்ற அந்தஸ்தில் உள்ளார்

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அமைச்சர் டியூ குணசேகர காரசாரமான முறையில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் மிகுந்த அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற குரல் அண்மைக்காலமாக ஆளுங்கட்சி மற்றும் எதிரணி பிரமுகர்களிடமிருந்து ஒலித்துவருகின்றது.

'இடதுசாரித் தலைவர் டாக்டர் என்.எம். பெரேரா மரணப் படுக்கையில் இருந்துகொண்டு அன்று வெளிப்படுத்திய விமர்சனக் கருத்துக்கள் எல்லாம் இன்று உண்மையில் நிரூபணமாகியுள்ளன' என்றார் டியூ குணசேகர.

'அரசாங்கத்தின் நிறைவேற்றுத்துறைக்கும் நீதித்துறைக்கும் இடையே மோதல் ஏற்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரம் தாழ்ந்துபோவார்கள். அமைச்சர்கள் தரம் தாழ்ந்துபோவார்கள். அரசியல் கலாசாரம் மாறிப்போகும். இவை எல்லாவற்றையும் அவர் அன்றே எதிர்வு கூறியிருந்தார்' என்றார் அமைச்சர் குணசேகர.

இலங்கையில் தற்போது ஜனாதிபதி ஆட்சி முறையை வைத்திருக்க வேண்டும் என்று எந்தவொரு அரசியல்கட்சியும் கோரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்

'இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை கொண்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியும் இன்று எங்கள் நிலைப்பாட்டில் தான் இருக்கின்றது... இந்த ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் 3 இல் 2 அல்ல 6 இல் 5 பலத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியும். அரசியலமைப்பில் ஒரு சிறிய திருத்தம் போதும் இதனை மாற்றுவதற்கு' என்றும் கூறினார் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் குணசேகர. 'ஆட்சி அதிகாரம் தனியொரு மனிதரின் கையில் இருக்கக்கூடாது.. நாடாளுமன்றத்திடமே இருக்க வேண்டும்' என்றும் மூத்த அமைச்சர் டியூ குணசேகர சுட்டிக்காட்டினார்.