இஸ்ரேலுடன் உறவு வேண்டாம்: இலங்கை அரசுக்கு கோரிக்கை

இலங்கை பாலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம்
Image caption ஜனாதிபதி ஒரு விதமாகவும் வெளியுறவு அமைச்சு ஒரு விதமாகவும் நடந்துகொள்வதாக இக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

காசாவில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்ற இஸ்ரேலுடன் இலங்கை சகல தொடர்புகளையும் கைவிட வேண்டுமென்று இலங்கை பாலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

இந்த அமைப்பு கொழும்பில் செவ்வாயன்று நடத்திய கூட்டத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐநாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி டயான் ஜெயதிலக, இலங்கை ஜனாதிபதி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான கொள்கையைக் கடைப்பிடித்தாலும், இலங்கை அரசாங்கத்தின் அங்கமான வெளிநாட்டு அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இஸ்ரேல் அரசாங்கத்துக்கு சார்பாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடகிழக்கில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்ட பாதுகாப்பு குழு இஸ்ரேலிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டிருந்தன என்றும், இதனால்தான் வெளிநாடுகளில் தமிழ் பிரிவினைவாதிகள் பலமடைந்தனர் என்றும் டயான் குற்றஞ்சாட்டினார்.

இலங்கையின் தவறான வெளியுறவுக் கொள்கையே இந்நிலைக்கு காரணம் என அவர் சாடினார்.

இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துவரும் வன்முறையின் பின்னணியில் இஸ்ரேலின் ஆதரவைப் பெற்ற குழுக்கள் இருப்பதாக அவர் பழிசுமத்தினார்.

ஆனால் பாலஸ்தீனம் தொடர்பான இலங்கையின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் இல்லை என்றும், அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டங்களின்போது பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயல்படுமாறு ஜனாதிபதி அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டார் என்றும் இலங்கை பாலஸ்தீன ஒத்துழைப்பு சங்கத்தின் சமதலைவர் அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.