கிளாஸ்கோ விளையாட்டு விழாவில் மகிந்த கலந்துகொள்ளமாட்டார்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்கின்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழாவில் காமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவியை வகிக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ள மாட்டார் என்று அவரது அலுவலகம் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்கான பயண ஏற்பாடுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கவில்லை என்றும் ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, மகிந்த ராஜபக்ஷ கிளாஸ்கோ விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரிட்டனிலுள்ள இலங்கைத் தமிழ் அமைப்புகள் கிளாஸ்கோ நகரில் போராட்டம் ஒன்றையும் இன்று நடத்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனாதிபதி கிளாஸ்கோ வராவிட்டாலும் தமது எதிர்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தமிழ் செயற்பாட்டாளர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.

உலகெங்கிலுமிருந்து சுமார் 4500 விளையாட்டு வீரவீராங்கனைகளும் ஆயிரக்கணக்கான விளையாட்டு ரசிகர்களும் கிளாஸ்கோ நகரை வந்தடைந்துள்ளனர்.

இன்று புதன்கிழமை மாலை பிரிட்டிஷ் மகாராணி 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழாவை தொடங்கிவைக்கிறார்.