"அச்சுறுத்தல்களுக்கு" எதிராக யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Image caption "அச்சுறுத்தல்களுக்கு" எதிராக ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் வடக்கே ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும், அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை எதிர்த்தும், அவற்றுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் யாழ்ப்பாணத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிரில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.

நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள ஊடக அமைப்புக்கள் இணைந்து இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.

வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினரும், சுதந்திர ஊடக அமைப்பினரும், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பினரும், இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

நிமலராஜன் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பலர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். பலர் கொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருக்கின்றார்கள். பலர் கடத்தப்பட்டிருக்கின்றார்கள். இதன் தொடர்ச்சியாக அண்மையில் தொழில் ரீதியான பயிற்சிக்காகச் சென்ற யாழ் ஊடகவியலாளர்கள் அந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முடியாதவாறு இரண்டு தடவைகள் பொலன்னறுவையிலும். நீர்கொழும்பிலும் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று ஊடக அமைப்புகள் கூறின.

தொடர்ந்து கடந்த வாரம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகப் பயிற்சியொன்றிற்காகச் சென்ற 7 ஊடகவியலாளர்கள் கஞ்சா கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதுடன். தாமதமாக கொழும்பு சென்றடைந்த அவர்கள் அங்கு நடைபெறவிருந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள முடியாதவாறு அதுவும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் இலங்கை அரசு ஊடகங்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றதா என்ற கேள்வியை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பியுள்ளனர்.

ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கைவிடப்பட்டு, ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின்போது குரல் கொடுக்கப்பட்டிருக்கின்றது.