படகில் வந்த 157 தமிழர்கள் நவுருவுக்கு அனுப்பப்பட்டனர் - காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் கடலில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்த 157 தமிழர்களை நவுரு தீவிலுள்ள தஞ்சக் கோரிக்கையாளர் தடுப்பு முகாமுக்கு அனுப்பிவைத்துள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்திக்க படகில் வந்தவர்கள் அனைவரும் மறுத்துவிட்டதால், அவர்கள் அனைவரும் நவுருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு வைத்து அவர்களது அகதி தஞ்சக் கோரிக்கை விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்றும் என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட்டும், குடிவரவு அமைச்சர் ஸ்காட் மாரிசனும் அறிவித்துள்ளனர்.

இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பியிருந்த இந்தியக் கொடி தாங்கிய படகு ஒன்றில் இவர்கள் ஆஸ்திரேலியா நோக்கி வந்தனர் என்று ஆஸ்திரேலிய அரசு கூறியிருந்தது. இவர்கள் வந்த படகு ஆஸ்திரேலிய சுங்கத்துறை கப்பல் ஒன்றினால் வழிமறிக்கப்பட்டிருந்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இவர்களை கடலில் இருந்தே இந்தியா அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆஸ்திரேலிய அரசாங்கம் எடுத்திருந்த முயற்சிக்கு அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்தியா இவர்களைத் திரும்ப எடுத்துக்கொள்ள வைப்பதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலிய அமைச்சர் ஸ்காட் மாரிசன் புதுதில்லி சென்று மேற்கொண்டிருந்தார்.

157 பேரையும் விசாரித்து அவர்களில் இந்தியக் குடியுரிமை கொண்டவர்களையும் இந்தியாவில் நீண்டநாள் தங்கியிருந்தவர்களையும் தமது நாட்டுக்குள் எடுத்துக்கொள்ள இந்தியா அப்போது சம்மதித்திருந்ததாகவும், இதனை அடுத்தே கப்பலில் இருந்த இவர்களை ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்குள் கொண்டுவந்திருந்ததாகவும் ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்காட் மாரிசன் கூறினார்.

ஆனால் இந்திய தூதரக அதிகாரிகளை சந்திக்க தாங்கள் விரும்பவில்லை என இவர்கள் அனைவரும் தெரிவித்துவிட்டதாகவும் அதனை அடுத்து, ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்புக்கு வெளியில் வைத்து தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் தற்போதைய ஆஸ்திரேலிய கொள்கைக்கு ஏற்ப அவர்கள் அனைவரும் நவுருவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

என்னதான் செய்தாலும் சட்டவிரோதமாக படகில் வந்த எவராலும் ஆஸ்திரேலியாவில் குடியேற முடியாது என்ற செய்தியை இந்த தருணத்தில் மீண்டும் தாங்கள் வலியுறுத்த விரும்புவதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆஸ்திரேலியாவில் அகதித்தஞ்சம் கோரிச்சென்றிருக்கும் 157 தமிழர்களை 72 மணி நேர முன்னறிவிப்பு கொடுக்காமல் வேறு நாட்டுக்கு அனுப்ப மாட்டோம் என்று ஆஸ்திரேலிய அரசு முன்பு நீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழியை மீறி அவர்களை அவசர அவசரமாக வெள்ளியன்று இரவோடிரவாக ஆஸ்திரேலிய அரசு நவுரு தீவுக்கு அனுப்பியிருப்பதாக கூறுகிறார் ஆஸ்திரேலிய தமிழர் பேரவையைச் சேர்ந்த பால விக்னேஸ்வரன்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தச் செய்தி குறித்து மேலும்