"இலங்கையில் செயலர்களை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே"

படத்தின் காப்புரிமை np.gov.lk
Image caption வட மாகாண முதல்வரும், ஆளுநரும்

இலங்கையில் அரசுத்துறைச் செயலர்களை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என்று நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வடமாகாண சபையின் தலைமைச் செயலர் விஜயலக்ஷ்மி ரமேஷ் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதே இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.

மாகாண முதலமைச்சர் சட்டவிரோதமான உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகவும், தன்னைப் பதவி நீக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என்று கோரியே மாகாண தலைமைச் செயலர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தலைமைச் செயலர் உட்பட அனைத்துச் செயலர்களையும் நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள அதேவேளை, வட மாகாண முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோர் ஒத்துழைப்பாக ஒருங்கிணைந்து செயலபட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாகாண முதலமைச்சர் பிறப்பிக்கும் சட்டபூர்வமான உத்தரவுகளுக்கு, தலைமைச் செயலர் மதிப்பளித்து, நிர்வாகத்தை சீர்குலைக்காத வகையில் செயல்படுவாரானால், சமுகமான ஒரு தீர்வுக்கு தாங்கள் தயார் என, வடமாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவித்தலை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறிய அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரன் மாகாண நிர்வாகத்தை குழப்பாத வகையில் செயற்படுமாறு தலைமை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வருகிறது எனவும் நீதிமன்றம் அறிவித்தது.